மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் இந்த முக்கியமான பாதையில், இந்தியப் பயனாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. “எங்கள் இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர்” என சமூக வலைத்தள பக்கத்தில் ஈரான் உருக்கமான செய்தியைப் பகிர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாட்டை வைத்துள்ள ஈரான், அங்கு கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற குறிப்பிட்ட “நட்பு நாடுகளுக்கு” மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிநேர முடக்கம் உலக அளவில் எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ள போதிலும், 94,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த கப்பல்கள் உட்பட இதுவரை எட்டு இந்தியக் கப்பல்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளன.
ஈரானின் உறுதிமொழிகளுக்கு இடையிலும், கள நிலவரப்படி இந்தியாவிற்கு எரிபொருளை ஏற்றி வரும் சுமார் 19 கப்பல்கள் இன்னும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளன. இதில் இந்தியக் கொடியிடப்பட்ட 9 கப்பல்களும், இந்தியாவுக்காக எரிசக்தித் தேவைகளை சுமந்து வரும் 10 வெளிநாட்டு கப்பல்களும் அடங்கும். குறிப்பாக, கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஏற்றி வரும் இந்தக் கப்பல்கள் ஜலசந்தியில் முடங்கிக் கிடப்பது இந்திய எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

