ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ஸ்டுடியோ சதுக்கம் பகுதியில், ஓடும் இருசக்கர வாகனத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் அவரது ஆண் நண்பரால் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைக்கின் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணை, அந்த நபர் நடுரோட்டில் வைத்துத் தொடர்ந்து தாக்கும் காட்சிகள் அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம், நச்சுத்தன்மையுள்ள உறவுகளின் (Toxic Relationships) அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பொதுவெளித் தாக்குதல்கள் மற்றும் உறவுகளுக்குள் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. எந்தவொரு பெண்ணும் தனது துணையிடமிருந்து இத்தகைய வன்முறையை எதிர்கொள்ளக் கூடாது எனப் பதிவிட்டுள்ள சமூக ஆர்வலர்கள், இச்சம்பவம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

