தமிழக அரசியல் களம் தற்போது தவெக மற்றும் திமுக இடையே ஒரு மறைமுகப் போர் உருவாகியுள்ளதை உணர்த்துகிறது.
திமுக எம்பிக்களின் வாரிசுகள், மாவட்ட நிர்வாகிகள் என இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் திமுக அமைச்சர் ஒருவரும் விரைவில் தவெகவில் இணையப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள திமுக தலைமை, கட்சிக்குள் நிலவும் அதிருப்தியைச் சரிசெய்ய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தவெகவில் இணையத் திட்டமிட்டுள்ள நிர்வாகிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் உடனடியாகச் சமரசம் பேசுமாறு திமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு (மா.செ.,க்கள்) உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தனியார் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தவெகவின் அசுர வளர்ச்சியைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தவும், சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியையும் முக்கிய முகங்களையும் தக்கவைத்துக் கொள்ளவும் திமுக எடுத்து வரும் இந்த தற்காப்பு நடவடிக்கை, வரும் தேர்தலுக்கான அரசியல் சூட்டை இப்போதே பன்மடங்கு அதிகரித்துள்ளது.

