Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"இது வெறும் ஆரம்பம் தான்".. 2003-ஐ விட மோசமான நிலை.. உலகை வறுக்கும் 'ஹீட் டோம்'.. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை. காத்திருக்கும் பேராபத்து.!

"இது வெறும் ஆரம்பம் தான்".. 2003-ஐ விட மோசமான நிலை.. உலகை வறுக்கும் 'ஹீட் டோம்'.. விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை. காத்திருக்கும் பேராபத்து.!

Tamizhan media 1 week ago

ரோப்பா முழுவதும் கடந்த சில வாரங்களாகக் கடுமையான வெப்ப அலை நீடித்து வரும் நிலையில், 2026 ஜூன் மாதம் மேற்கு ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக வெப்பமான ஜூன் மாதமாகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கோப்பர்னிகஸ் காலநிலை மாற்ற சேவை' அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மேற்கு ஐரோப்பாவின் சராசரி வெப்பநிலை 20.74 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்துள்ளது. இது வழக்கமான சராசரியை விட 3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும். மனிதர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்குக் முதன்மைக் காரணம் என்றும், தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட உலகின் சராசரி வெப்பநிலை 1.39 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

வளிமண்டலத்தில் உருவாகும் உயர் அழுத்த மண்டலம், ஒரு பாத்திரத்தின் மூடியைப் போல வெப்பத்தை வெளியேற விடாமல் அடைத்து வைக்கும் ‘ஹீட் டோம்’ (Heat Dome) எனப்படும் வானிலை நிகழ்வே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஜூன் மாதத்தின் பிற்பாதியில் மட்டும் ஐரோப்பாவில் சுமார் 41 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸைத் தாண்டிய கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை காற்றில் நிலவிய அதிக ஈரப்பதமும், இரவிலும் வெப்பம் குறையாத ‘டிராபிக்கல் நைட்ஸ்’ (Tropical Nights) எனப்படும் சூழலும் மக்களின் அவதியைக் கூட்டியுள்ளன. வழக்கமாக இரவு நேரங்களில் கிடைக்கும் குளிர்ச்சி கிடைக்காததால் மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையே, மத்திய தரைக்கடல் பகுதியின் கடல் நீர் வெப்பநிலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் கடல்சார் சுற்றுச்சூழல் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், கடற்காற்றின் குளிர்ச்சியும் குறைந்து கடலோரப் பகுதிகள் வெப்பமயமாக மாறியுள்ளன. மேலும், கிழக்கு ஐரோப்பாவில் வறட்சி அதிகரித்துள்ள நிலையில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் காடுகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ இயற்கை வளங்களை அழித்து வருகிறது.

பருவநிலை மாற்றம் இல்லையென்றால் இத்தகைய கடுமையான வெப்ப அலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று ‘வேர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன்’ (World Weather Attribution) ஆய்வு உறுதிப்படுத்துகிறது. உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், எதிர்காலத்தில் வெப்ப அலைகள் இன்னும் அதிக தீவிரத்துடனும், நீண்ட நாட்களுக்கும் நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள் இத்தகைய வெப்பத்தைத் தாங்கும் தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்டவை அல்ல. எனவே, மாறிவரும் புதிய பருவநிலைச் சூழலுக்கு ஏற்ப நகரங்களையும், மருத்துவக் கட்டமைப்புகளையும் உடனடியாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media