வேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை கொடூர கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பேரணாம்பட்டில் தங்கி வீட்டு வேலை செய்து வந்த தனலட்சுமி, மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் விஜயகுமாரே குழந்தைகளைப் பராமரித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், சின்னவரிகம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (25) என்ற இளைஞருடன் தனலட்சுமிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியின் இந்த நடத்தையை விஜயகுமார் பலமுறை கண்டித்தும், அறிவுரை சொல்லியும் தனலட்சுமி அதனைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு குமரேசனுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு தாமதமாக வீடு திரும்பிய தனலட்சுமியிடம் விஜயகுமார் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, “நான் எங்கு வேண்டுமானாலும் போவேன், அதைக் கேட்க நீ யார்? குமரேசனும் நானும் ஜாலியா சுத்திட்டு வரோம்” என்று தனலட்சுமி தறகுகுறைவாகப் பேசியதால் விஜயகுமார் உச்சக்கட்ட ஆத்திரமடைந்துள்ளார்.
முன்பே திட்டமிட்டபடி சந்தையிலிருந்து வாங்கி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனலட்சுமியின் இரண்டு மணிக்கட்டு நரம்புகளையும் விஜயகுமார் வெட்டியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும், கால்களை மொபைல் சார்ஜர் ஒயரால் கட்டி, முகத்தைத் துணியால் இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை அரிசி சாக்குப்பையில் கட்டி, சமையலறை பரணில் ஏற்றி பழைய பொருட்களைப் போட்டு மறைத்துள்ளார். ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, விடிந்ததும் பிள்ளைகளுக்குச் சமைத்துப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மனைவியைக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார்.
கொலை நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டின் சமையலறை பரணிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். குடியாத்தம் போலீசார் விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த தனலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி, விஜயகுமாரைக் கைது செய்தனர். போலீசாரிடம் விஜயகுமார் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலத்தைக் கேட்டு அதிகாரிகளே அதிர்ந்து போயினர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பெற்ற தாய் இறந்து, தந்தை சிறைக்குச் சென்றதால் அவர்களின் மூன்று பிள்ளைகளும் திக்கற்று தவித்து வருகின்றனர்.

