மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சாந்தி நிகேதன் காலனியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் ஏறி இறங்கிய பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீட்டின் வெளியே இரு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஒரு சிறுவனின் மீது ஏறி அவனை நிலைதடுமாறச் செய்தது. காரின் சக்கரம் முழுமையாக அவன் உடல் மீது ஏறி இறங்கிய நிலையிலும், விபத்து நடந்த சில விநாடிகளிலேயே அந்தச் சிறுவன் எதுவுமே நடக்காதது போல எழுந்து நின்றது அங்கிருந்தவர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும், இந்த விபத்தில் சிறுவனுக்கு காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த உடனேயே மனிதாபிமானத்துடன் செயல்பட்ட கார் உரிமையாளர் சஞ்சய் அகர்வால், சிறுவனை மீட்டு அருகில் உள்ள பாம்பே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மேலும், கவனக்குறைவாக காரை ஓட்டிச் சென்ற தனது டிரைவரை அவரே நேரில் அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கண்ட இணையவாசிகள், “விதி வலியது தான், ஆனால் அந்தச் சிறுவனின் ஆயுள் அதைவிட கெட்டி” என நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://h5.vdo.ai/media_file/v-thehansindia/source/uploads/videos/1771479910166996a366f41d1

