Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மீண்டும் ஒரு துயரம். வயநாட்டில் என்ன நடக்கிறது. 5 பேர் பலி மீட்புப் பணிகள் தீவிரம். அதிர்ச்சியில் கேரளா.!

மீண்டும் ஒரு துயரம். வயநாட்டில் என்ன நடக்கிறது. 5 பேர் பலி மீட்புப் பணிகள் தீவிரம். அதிர்ச்சியில் கேரளா.!

Tamizhan media 6 days ago

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்து வரும் மிக பலத்த மழையின் காரணமாக மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் பகுதியில், திடீரென சுமார் 22.6 செ.மீ. அளவுக்கு அதிதீவிர கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக, சுரங்கப் பணிக்காகத் தோண்டப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மண் சரிந்து, அப்பகுதியையே தலைகீழாக மாற்றியுள்ளது.

இந்த நிலச்சரிவின் கோரப் பிடியில் சிக்கி ஒரு வீடும், ஒரு தேவாலயமும் முழுமையாக உருக்குலைந்து சேதமடைந்துள்ளன. மேலும், அப்பகுதியில் இருந்த பேருந்து நிறுத்தமும், ஒரு பாலமும் மண்ணுக்குள் முற்றிலும் புதைந்து போயின. இந்த விபத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதையுண்ட நிலையில், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் மண்ணுக்குள் சிக்கி மாயமாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

மண்ணுக்குள் புதைந்த 6 வெளிமாநில தொழிலாளர்களை மீட்புப் படையினர் முதற்கட்டமாக மீட்டு, சிகிச்சைக்காக மேப்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், அச்சமடைந்த பொதுமக்கள் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட வரலாற்றுப் பேராபத்தான நிலச்சரிவில் சிக்கி 420-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் இன்னும் மக்கள் மனதில் நீங்காத வடுவாக உள்ளது. அந்தப் பெருந்துயரத்தின் காயம் ஆறுவதற்குள், தற்போது மீண்டும் அதே மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மனித உயிர்களைப் பலிவாங்கியிருப்பது ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media