மறைந்த பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் உடல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் முக்கியத் தூணாக விளங்கிய அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பல சினிமா பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், மறைந்த ஆர்.பி. சௌத்ரியின் உடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையைச் செலுத்தினார்.
தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் முக்கியத் திரைப்படங்களைத் தயாரித்த ஆர்.பி. சௌத்ரியின் மறைவு விஜய்யை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அஞ்சலி செலுத்திய பின்னர், சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவாவை விஜய் கட்டிப்பிடித்து விம்மி விம்மி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. நீண்ட நேரம் கண்ணீர் மல்க ஜீவாவிற்கு ஆறுதல் கூறிய விஜய்யை, அங்கிருந்த மற்ற திரை பிரபலங்களும் உறவினர்களும் தேற்றினர். திரையுலகில் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்ற பிணைப்பு இவர்களிடையே இருந்ததை இந்த நிகழ்வு உணர்த்தியது.
