Dailyhunt
"நான் காங்கிரஸ் காரன் தான்". திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பரபரப்பு பேச்சு.. கடைசி நேர அரசியல் ட்விஸ்ட்..!

"நான் காங்கிரஸ் காரன் தான்". திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பரபரப்பு பேச்சு.. கடைசி நேர அரசியல் ட்விஸ்ட்..!

Tamizhan media 6 days ago

காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார்.

தான் போட்டியிடாததற்கான காரணத்தை விளக்கிய அவர், தன் மீதான அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். குறிப்பாக, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” எனத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், இந்தத் தேர்தலில் துணை முதல்வர் பதவியைக் குறிவைத்தே தான் போட்டியிடுவதாக எழுந்த வதந்திகள் தன் மனதைக் காயப்படுத்தியதாக அவர் உருக்கமுடன் தெரிவித்தார்.

தனக்குப் பதிலாக, மறைந்த காங்கிரஸ் தலைவர் இல. இளையபெருமாளின் மகன் ஜோதிமணி காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விசிக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று திருமாவளவன் அதிரடியாக அறிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய இளையபெருமாளின் வாரிசுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தொடர்பை ஏற்படுத்த அவர் முயன்றுள்ளார். “யுத்தத்தில் சில நேரங்களில் பின்வாங்குவதும் ஒரு வகை ராஜதந்திரமே” என்று குறிப்பிட்ட திருமாவளவன், அவதூறுகளை முறியடிக்கவே இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், திருமாவளவனின் இந்த அறிவிப்பு ஒரு புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி, தான் இப்போதும் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். “நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவே விருப்ப மனு அளித்திருந்தேன்; ஆனால் தற்போதைய அறிவிப்பு எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது” எனக் கூறியுள்ள அவர், திமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் அங்கம் வகிப்பதால், தலைவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.

விசிக சின்னத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு கட்சியின் தலைவர் மற்றொரு கட்சியின் உறுப்பினரைத் தன் கட்சி வேட்பாளராக அறிவித்தது தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. எது எப்படியோ, திருமாவளவனின் இந்த திடீர் ‘ராஜதந்திர’ நகர்வும், ஜோதிமணியின் ‘காங்கிரஸ்’ அடையாளமும் காட்டுமன்னார்கோயில் தொகுதி தேர்தலை தற்போதே சூடாக்கியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media