ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிசக்தி ஏற்றுமதி பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) தற்போது ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு இந்தப் பாதையைத் திறக்க மறுத்து வரும் ஈரான், இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் கப்பல்களைக் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவிற்கு எரிபொருள் ஏற்றி வரும் சுமார் 19 கப்பல்கள் (9 இந்தியக் கொடி ஏந்தியவை, 10 வெளிநாட்டுக் கொடி ஏந்தியவை) ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியிருப்பது கவலையை ஏற்படுத்தியது. ஏற்கனவே 94,000 டன் எல்பிஜி ஏற்றி வந்த ‘பிடபிள்யூ டைர்’ மற்றும் ‘பிடபிள்யூ எல்ம்’ உட்பட எட்டு இந்தியக் கப்பல்கள் ஈரானின் உதவியுடன் பாதுகாப்பாக அந்தப் பகுதியைக் கடந்து வெளியேறியுள்ளன.
மீதமுள்ள கப்பல்கள் மற்றும் அதில் உள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு, டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில், “நமது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கைகளில் உள்ளனர், கவலை வேண்டாம்” என்று ஈரான் தூதரகம் உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்த உறுதிமொழி, போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவிற்கான எரிசக்தி விநியோகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

