உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மனைவியின் ஒரு கொடூரமான வாட்ஸ்அப் செய்தியால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்த நிலையில், கணவர் எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த நபரின் மனைவி அவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்திதான் இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது. அதில், “நீ செத்துப் போ… நீ ஒரு கோழை என்று உன் குழந்தையிடம் நான் வளர்க்கும் போது சொல்வேன்” என்று மனைவி பதிவிட்டுள்ளார். தனது சொந்த மனைவியே தன்னை ‘கோழை’ என்று அழைத்ததும், எதிர்காலத்தில் குழந்தையிடம் தன்னைப்பற்றி தவறாகச் சித்திரிக்கப் போவதாகக் கூறியதும் அந்த இளைஞரை நிலைகுலையச் செய்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது அலைபேசியைச் சோதனையிட்டபோது மனைவியின் அந்த சர்ச்சைக்குரிய வாட்ஸ்அப் மெசேஜ் ஆதாரமாகக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மனைவியின் தூண்டுதல் காரணமாகவே இந்த தற்கொலை நிகழ்ந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

