Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"நீ வேணா சண்டைக்கு வாடா". "அதிமுக கூட்டத்திற்குள் நுழைந்த சி.வி.சண்முகம் படை.. வெடித்த மோதல்.. இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..!

"நீ வேணா சண்டைக்கு வாடா". "அதிமுக கூட்டத்திற்குள் நுழைந்த சி.வி.சண்முகம் படை.. வெடித்த மோதல்.. இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்..!

Tamizhan media 1 week ago

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் நிலவி வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கிய நிலையில், திடீரென அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள், “நாங்களும் அதிமுக தான், எங்களிடம் உறுப்பினர் அட்டை இருக்கிறது” என்று கூறி தங்களையும் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டு அந்த இடமே பெரும் பரபரப்பானது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக, அவருக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் உச்சகட்டமாக, தமிழக சட்டசபையில் விஜய் தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சி கொறடாவின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தாலும், பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் அது வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும், அதிருப்தி காட்டிய எம்.எல்.ஏ-க்களின் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்து, தன் தீவிர ஆதரவாளர்களை அந்தப் பதவிகளில் நியமித்தார். இதற்கிடையே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தனர். ஆனால், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர் அதிமுகவிலேயே தொடர்கின்றனர். இதில் எஸ்பி வேலுமணிக்குத் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், சி.வி.சண்முகத்திற்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், “நான் கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியவில்லை” என சண்முகம் அண்மையில் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

தனது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, கட்சி அலுவலகச் சாவியை புதிய செயலாளர் பசுபதியிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருந்த சி.வி.சண்முகம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்தச் சூழ்நிலையில், திண்டிவனத்தில் அதிகாரப்பூர்வமாக நடந்த அதிமுக கூட்டத்திற்கு அவரது ஆதரவாளர்கள் திடீரெனத் திரண்டு வந்து நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட்டது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு தங்களை இணைத்துக் கொள்ள வந்தார்களா அல்லது கூட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்களா என்ற விவாதம் தற்போது அதிமுகவினர் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media