மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், உணவு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனது இரண்டாவது மனைவியைக் கொன்றுவிட்டு, இரண்டு நாட்களாக சடலத்துடனேயே கணவன் தங்கியிருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
38 வயதான ஜெகதீஷ் தாபர் என்பவர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து ரீமாபாய் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
மேலும் சம்பவத்தன்று இரவு உணவு தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மரக்கட்டையால் ரீமாபாயைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த பிறகும் எவ்வித சலனமுமின்றி, ஜெகதீஷ் அவரது உடலை கட்டிலிலேயே போட்டுவிட்டு, அதே அறையில் தனது இரண்டு குழந்தைகளுடன் இரண்டு நாட்களாகப் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் ஜெகதீஷின் தந்தை அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரீமாபாயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரச் செயல் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஜெகதீஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

