ரயில் பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பணியில் இருக்கும் ஒரு டி.டி.இ (TTE) தனது கையில் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்துள்ளார்.
பயணி அந்த கடிகாரத்தை இணையத்தில் தேடிப் பார்த்தபோது, அது ‘ரிச்சர்ட் மில்லே பெராரி’ (Richard Mille Ferrari) மாடல் என்பதும், அதன் இந்திய மதிப்பு சுமார் 9.67 கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது. ஒரு சாதாரண ரயில்வே ஊழியர் இவ்வளவு விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சொகுசு கடிகாரம் குறித்து பயணி கேள்வி எழுப்பியபோது, அந்த டி.டி.இ மிகவும் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். இந்தக் கடிகாரத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குப் பரிசாக வழங்கியதாக அவர் கூறியுள்ளார். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பொருளை நண்பர் பரிசாக அளித்தார் என்ற அவரது விளக்கம், சமூக வலைதளவாசிகளிடையே பெரும் சந்தேகத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அந்தப் பயணி இந்த வீடியோவுடன் கடிகாரத்தின் விலையை விளக்கும் ஸ்கிரீன்ஷாட்களையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோவை மையமாக வைத்து இணையத்தில் ஒரு பெரிய விவாதமே நடக்கிறது. ஒரு டி.டி.இ-யிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அந்தக் கடிகாரம் உண்மையானதா அல்லது அதன் முதல் தர நகலா (First Copy) என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது உண்மையான கடிகாரமாக இருந்தால், ஒரு அரசு ஊழியர் இவ்வளவு மதிப்புமிக்க பரிசைப் பெற சட்டப்படி இடமுண்டா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

