கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, காங்கிரஸ் பிரமுகர் நெல்சனின் வீட்டிற்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கும்பல் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்சனின் மகன் ஆல்டிரின் பால், சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்பது போல் வந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைக் கொடூரமாக வெட்டியது. இதனைத் தடுக்க வந்த நெல்சன், அவரது மனைவி, மூத்த மகன் மற்றும் 75 வயது முதியவர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கி, வீட்டில் இருந்தப் பொருட்களையும் அடித்து நொறுக்கியது.
வீட்டினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், தப்ப முயன்ற கும்பலைச் சுற்றி வளைத்தனர். காயமடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போலீசாருக்கு அறிவுறுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக ராஜா பேரோன் என்பவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வீடு புகுந்து நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

