வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதி கோயிலில் வைத்து வழிபட்ட தவெக அமைச்சர் ஆர். வினோத்தின் செயலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட் ஆவணம் என்பது மக்களின் வரிப்பணம் தொடர்பான அரசு சாசனம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தளத்தில் வைப்பது அரசியல் சாசனத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரானது என்றும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய ரகசிய அரசு ஆவணம் என்பதால், அதை பொதுவெளியில் கொண்டு சென்றது ரகசியக் காப்பு உறுதிமொழிக்கு எதிரான செயல் என்றும் விமர்சித்துள்ளது.
மேகதாது பிரச்சினை, விவசாயிகள் கடன் தள்ளுபடி போன்ற முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு, பட்ஜெட் நகலை வைத்து வழிபாடு நடத்துவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதம் என்று கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது. பன்மைத்துவம் நிறைந்த மதச்சார்பற்ற நாட்டில், மத நம்பிக்கைகள் என்பது தனிப்பட்ட விவகாரமாகவே இருக்க வேண்டும் என்றும், அதை அரசாங்கத்தோடும் அரசியலோடும் கலக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தவெக அரசும் அதன் அமைச்சர்களும் இத்தகைய போக்குகளை உடனடியாகக் கைவிட்டு, மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என செயற்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு. வெங்கடேசனும் இச்சம்பவத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். பட்ஜெட் ஆவணங்கள் இறைவனுக்கான காணிக்கையோ அல்லது ஆன்மீகப் பொருளோ அல்ல என்றும், தனிமனித மத நம்பிக்கைகளுக்காக அரசியல் ஆவணங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் அவர் விமர்சித்திருந்தார். தமிழகத்தில் இதுவரை எந்தவொரு அமைச்சரும் பட்ஜெட் நகலை திருப்பதிக்குக் கொண்டு சென்றதில்லை என்ற நிலையில், தவெக அமைச்சரின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

