திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் ரஞ்சித்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறையில் இருந்தபடி ரவுடி ஒருவர் தீட்டிய 'ஸ்கெட்ச்' குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரதிபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், கூத்தைப்பார் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலராகவும், அப்பகுதியில் டாஸ்மாக் பார் உரிமையாளராகவும் இருந்து வந்தார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை குறித்து நவலப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில், துவாக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ‘பாட்டில் மணி’ என்பவருக்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே இருந்த மோதல் அம்பலமானது. ரஞ்சித்குமார் நடத்தி வந்த பாரில் பாட்டில் மணி மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் அடிபணிய மறுத்ததே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. சினிமா பாணியில் முன்கூட்டியே திட்டமிட்ட பாட்டில் மணி, ஒரு மாதத்திற்கு முன்பே ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், மற்றுமொரு வழக்கில் பாட்டில் மணி கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டதால் கொலைத் திட்டம் தள்ளிப்போனது. ஆனால், சிறைக்குச் சென்றும் தனது வெறியைக் கைவிடாத மணி, அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக கிரி (20), மதன் (25) மற்றும் நான்கு சிறுவர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, கவுன்சிலரின் நடமாட்டத்தை ரகசியமாகக் கண்காணித்து, சமயம் பார்த்து அவரைத் தீர்த்துக்கட்ட ஆணையிட்டுள்ளார்.
இறுதியில், பாட்டில் மணியின் திட்டப்படி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்த போலீசார், கிரி மற்றும் மதன் ஆகியோரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் மற்ற நபர்களைத் தேடி வரும் வேளையில், சிறையில் இருந்தபடி ரவுடிகள் இத்தகைய குற்றங்களை அரங்கேற்றுவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

