தமிழகத்தின் பிரபலமான தனியார் வானிலை ஆய்வாளர்களில் ஒருவரான 'கோயம்புத்தூர் வெதர்மேன்' சந்தோஷ் கிரிஷ், தனது சமூக ஊடகப் பக்கத்தில் தற்போதைய வானிலை சூழல் குறித்தும், தென்மேற்கு பருவமழை குறித்தும் மிகவும் கவலையுடனும் எதார்த்தத்துடனும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் மிகவும் நேசிக்கும் தனது சில பின் தொடர்பவர்கள் மனநிலையை நினைத்து உண்மையிலேயே கவலைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்க்கப் போகிறது என்ற கசப்பான உண்மையை மக்கள் பலர் இன்னும் ஏற்றுக்கொள்ள மறுப்பதே அவரது இந்த கவலைக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
அவரது கணிப்பின்படி, கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டை விட ஒரு மோசமான ஆண்டு இருந்ததே இல்லை என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அதிக மழைப்பொழிவு இருந்த ஆண்டுகளைப் பற்றி முதன்முதலில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தவன் நான்தான் என்று நினைவுகூர்ந்த அவர், பூமி உருவான காலத்தில் இருந்தே வறட்சியும் வெள்ளமும் ஒரு சுழற்சியாகவே இருந்து வருகின்றன என்றும், தற்போதைய புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த வறட்சியும் வெள்ளமும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், இயற்கை சூழல் ஒருபுறமிருக்க நாம் செய்யும் சில தவறுகளும் இந்த நிலையை மோசமாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய சூழலில் நிலத்தடி நீரை உறிஞ்ச அதிகப்படியான ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, தென்னை அல்லது பாக்கு போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடுவது மற்றும் ஊடு பயிர் செய்வது போன்ற காரணங்களால் நாம் உண்மையிலேயே திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார். சுயநலத்திற்காக பொய் கூறி மக்களை ஏமாற்றுபவனாக நான் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ள அவர், இந்த ஆண்டும், அடுத்த ஆண்டு கோடையிலும் நாம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்; ஏனெனில் இந்த ஆண்டு நிச்சயமாக ஒரு ‘சூப்பர் எல் நினோ’ ஆண்டாக இருக்கும், இதன் பக்கவிளைவுகள் அடுத்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வரை கூட நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாகத் தன்னால் இயன்றவரை தமிழக விவசாயிகளுக்கு துல்லியமான வானிலை தகவல்களை வழங்கி உதவி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சந்தோஷ் கிரிஷ், வானிலையில் சாதகமற்ற சூழல் நிலவும் போது, ஒரு வானிலை கணிப்பாளராகத் தனது கணிப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றும், ஆபத்துக்களை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தங்களுக்கு அதிக ஃபாலோயர்களைப் பெறுவதற்காக இன்னமும் “கனமழை பெய்யும்” என்ற தவறான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்றும் பலர் இப்பொழுதும் இருக்கிறார்கள் என்றும், ஆனால் தனது சுயநலத்திற்காகப் பின் தொடர்பவர்களை ஏமாற்றும் ஒருவனாக தான் நிச்சயம் இருக்க மாட்டேன் என்றும் அவர் மிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் பதிவிட்டுள்ளார்.
இறுதியாக, “அடுத்த கனமழை எப்பொழுது வரும்?” என்று தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலேயே கடந்த சில மாதங்களாகத் தனது நேரம் மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் கழிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். எனவே, தனது மன அமைதிக்காக இதிலிருந்து ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ள அவர், வரவிருக்கும் நாட்களில் வானிலையில் ஏதேனும் சாதகமான சூழல் ஏற்படும்போது நிச்சயமாக மீண்டும் வந்து பதிவிடுவதாகவும், அதுவரை தங்களிடம் இருந்து தினசரி வானிலை அறிக்கையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

