கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் கிராமத்தில், சொத்துத் தகராறில் மதுபோதையில் இருந்த மகனே பெற்ற தந்தையைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த சடையன் (என்ற) ராஜேந்திரன் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இவர்களில் மூத்த மகன் ஐயப்பன், சம்பவத்தன்று மதுபோதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த தந்தை ராஜேந்திரனிடம் தனக்குரிய சொத்தை உடனே பிரித்துத் தருமாறு ஐயப்பன் கேட்டுள்ளார். தந்தை ராஜேந்திரனும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், மகன் போதையில் உளறுவதாகக் கருதி அந்தப் பேச்சைத் தவிர்த்து, வாக்குவாதம் செய்ய வேண்டாம் என அவரைக் கண்டித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த ஐயப்பன் தந்தையின் பேச்சைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தை அடைந்த மகன் ஐயப்பன், வீட்டில் மீன் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராஜேந்திரனின் கழுத்து மற்றும் முகப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளி ஐயப்பனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

