உலக அதிசயங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால், உண்மையில் 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோவிலாக இருந்தது என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இதனால் தாஜ்மஹால் குறித்த வரலாற்றுச் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டிய உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமே தாஜ்மஹால் என்பது வரலாற்றுப் பதிவாக உள்ளது. இருப்பினும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னதாக ஒரு சிவன் கோவில் இருந்ததாக ஒரு தரப்பினர் தொடர்ந்து உரிமை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது.
அக்ரேஷ்வர் மகாதேவ் நக்நாதீஸ்வர் விராஜ்மான் சார்பில் வழக்கறிஞர் ஹரி சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தில் கி.பி. 1155-1156 ஆம் ஆண்டுகளில் ராஜா பரமர்தி தேவ் என்பவரால் ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோவில் கட்டப்பட்டது. எனவே, தாஜ்மஹாலை முழுமையாகப் பார்வையிட்டு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும். வெறும் கட்டடக்கலை அம்சங்களை மட்டும் பார்க்காமல், அது சிவனுக்கான கோவிலா என்பதை அறிவியல் பூர்வமாகத் தீர்மானிக்க இந்த ஆய்வு அவசியம்” என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் அகர்வால், நீதிமன்றத்தின் சார்பில் ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்து மத்திய அரசும், இந்திய தொல்லியல் துறையும் தங்களது பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தாஜ்மஹாலின் அடியில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன என்பது குறித்த விவாதங்கள் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளன.

