திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மார்ட்டின், கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கலுக்குப் பிறகு லால்குடி ரவுண்டானாவில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அரசுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து லால்குடியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்புமனுவில் லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது பெயரில் ரூ.1,048 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்புத் தேர்தலில் தமிழ்நாட்டின் மிகப்பணக்கார வேட்பாளர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார். பெரும் தொழிலதிபரான லீமா ரோஸ் மார்ட்டின், தனது சொத்து மதிப்பின் மூலம் அரசியல் மற்றும் ஊடகத் தளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் லீமா ரோஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இவரது கணவரும் பிரபல லாட்டரி தொழிலதிபருமான மார்ட்டின் பெயரில் ரூ.4,159 கோடி மதிப்பிலான சொத்துகளும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ரூ.665 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பிரம்மாண்டமான சொத்து மதிப்பைக் கொண்டுள்ள இந்த வேட்பாளர், தொகுதி வளர்ச்சிக்கான வாக்குறுதிகளுடன் தனது தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

