Dailyhunt
"தாயில்லா நிலையை இப்போ உணர்கிறேன்" அன்னைக்கு நான் கால் உடைஞ்சி கிடந்தப்போ. எனக்கு இந்த நிலைமை. அதிமுக மீது சீறிய தனபால்.!!

"தாயில்லா நிலையை இப்போ உணர்கிறேன்" அன்னைக்கு நான் கால் உடைஞ்சி கிடந்தப்போ. எனக்கு இந்த நிலைமை. அதிமுக மீது சீறிய தனபால்.!!

Tamizhan media 1 week ago

2026 சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு, அதிமுக தலைமை இந்த முறை சீட் வழங்கவில்லை.

அவிநாசி தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். கடந்த ஆறு மாதங்களாகவே கட்சித் தலைமை தனபாலை ஒதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் புறக்கணிப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தலைமையின் இந்த அணுகுமுறையால் அதிருப்தியடைந்த தனபாலின் மகன் லோகேஷ் தனபால், அதிமுகவிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். தற்போது அவர் ராசிபுரம் தனித் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். தனது மகனின் இந்த முடிவிற்கு அதிமுக தலைமையின் அலட்சியமே காரணம் எனத் தெரிவித்துள்ள தனபால், கடந்த ஆறு மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து பார்க்கவில்லை என்றும், தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனது ஆதங்கத்தைச் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ள தனபால், 1988-ல் தனக்கு விபத்து ஏற்பட்டபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். “தாயில்லா நிலையை இப்போது உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ள அவர், பழைய விசுவாசமான தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி மதிக்கவில்லை என்பதைச் சூசகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி முன்னோடிகளைப் புறக்கணிக்கும் இப்போக்கு அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே நேரத்தில், கரூரில் திமுக மூத்த முன்னோடி கே.சி. பழனிசாமியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்த சம்பவத்தையும் இணையவாசிகள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். ஒரு தலைவர் தனது கட்சி முன்னோடிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் உதாரணமாக இருப்பதாகவும், ஆனால் அதிமுகவில் மூத்த தலைவர்கள் அவமதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஒப்பீடு 2026 தேர்தல் களத்தில் அதிமுகவிற்குப் பின்னடைவாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media