தாய்லாந்து நாட்டின் பெட்சாபுரி மாகாணம், டான்யாய் தாங் பகுதியில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு, உலகத் தமிழர்களைப் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு கண்டறியப்பட்ட பழமையான புதைவிடம் ஒன்றை ஆய்வு செய்தபோது, வடகிழக்கு திசையில் தலை வைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து, அந்தப் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு மதிப்புமிக்க தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. அதில் மிக முக்கியமாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு பழங்காலத் தங்க மோதிரம், உலகிற்குப் பழந்தமிழர்களின் கடல் கடந்த வரலாற்றுப் பெருமையை மீட்டுத் தரும் சான்றாக மாறியுள்ளது.
தொடக்கத்தில் இந்த மோதிரத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அதில் பிராமி எழுத்துக்க வடிவில் “புசரக்ஷிடச” (பூச நட்சத்திரத்தால் காக்கப்பட்டவர்) என்று வடமொழியில் எழுதப்பட்டிருப்பதாகக் கருதினர். ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த “சார்” என்ற தொல்லியல் வரலாற்று தேடல் குழுவின் நிறுவனரும், மதுரையைச் சேர்ந்தவருமான ரஞ்சித் குமார் இந்த எழுத்துக்களின் உண்மையான பின்னணியை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த மோதிரத்தில் இருப்பது வடமொழி அல்ல என்றும், அவை நேரடியாகப் பார்க்கும்போது இடவல மாற்றத்துடன் (Mirror Image) செதுக்கப்பட்ட பழந்தமிழ் “தமிழி” எழுத்துக்கள் என்றும் அவர் நிரூபித்துள்ளார்.
பழந்தமிழர்கள் தங்களின் பெயரையோ அல்லது முத்திரையையோ தேன் மெழுகிலோ, களிமண்ணிலோ அழுத்திப் பயன்படுத்தும் நோக்கில், மோதிரங்களில் எழுத்துக்களை இடவல மாற்றத்துடன் செதுக்கும் தனித்துவமான வழக்கத்தைக் கொண்டிருந்தனர். முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே அணிந்திருந்த இத்தகைய முத்திரை மோதிரத்தில், “அளர் வைரதன்” என்ற தமிழரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை ரஞ்சித் குமார் கண்டறிந்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும் இந்த எழுத்துக்கள் நிச்சயமாக “தமிழி” தான் என்பதை மிக உறுதியாகச் சான்றளித்துள்ளார்.
தமிழ் அகராதியின்படி ‘அளர்’ என்ற சொல்லுக்கு நீர், மஞ்சள், உவர் என்று பல அர்த்தங்கள் இருந்தாலும், இது வளமான நஞ்சை நிலம் அல்லது மருத நிலத் திணையைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரின் பெயரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தாய்லாந்து மண்ணில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்தத் தங்க முத்திரை மோதிரம், பழந்தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்ததையும், அவர்களின் நாகரிகமும் ஆதிக்கமும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எந்தளவுக்குப் பரவியிருந்தது என்பதையும் உலகிற்கு மீண்டும் பறைசாற்றியுள்ளது.

