தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவதுதான்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் வெறும் 10 முதல் 15 இடங்களை மட்டுமே விஜய் பிடிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காமல் தவித்த நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார். இந்த அசுர வளர்ச்சி எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள அதே வேளையில், திமுக தலைமையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவெக ஆட்சி அமைத்த பிறகு, விஜய்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத வேறு சில கட்சிகளும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் போட்டியிடலாம் என்பதும், இடைத்தேர்தல்களில் தங்களது கட்சியினரை நிற்க வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பலாம் என்பதுமே இக்கட்சிகளின் திட்டமாகச் சொல்லப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் விஜய்க்கு ஆதரவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அரசியல் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மறுபுறம், அதிமுகவை மெல்ல மெல்லச் சாய்த்து நிலைகுலையச் செய்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம். ஏற்கனவே 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தாவி வருவது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிமுகவின் இந்த பலவீனத்தை தவெக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அக்கட்சியின் வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி வருகிறது.
அதிமுக மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிலும் தவெக சத்தமில்லாமல் தன் கைவரிசையைக் காட்டி வருகிறது. நூற்றுக்கணக்கான ஒன்றிய செயலாளர்கள் ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது நகர, பகுதி, வட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களும் கட்சி மாறி வருகின்றனர். குறிப்பாக, திமுக குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப், சென்னையின் முக்கிய நிர்வாகிகளான ஆயிரம் விளக்கு ரவி, சாமுவேல், மகளிரணி சௌமியா, முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் மற்றும் திருவள்ளூர் குமரன் ஆகியோர் தவெக-வில் இணைந்திருப்பது அண்ணா அறிவாலய வட்டாரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தவெக-வில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகி உள்ள தகவல், திமுக தலைமையை அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குத் தள்ளியுள்ளது.

