கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள், சிட்டிங் எம்.எல்.ஏ-க்களான ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ்.
பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த முடிவு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கமளித்தாலும், அவர்கள் திமுகவுடன் நெருக்கம் காட்டியதே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தேர்தலுக்குப் பின், அதிருப்தியில் இருந்த பனையூர் பாபு திமுகவில் இணைந்த நிலையில், விசிக மாநில முதன்மை செயலாளரான ஆளூர் ஷா நவாஸும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தனிக்கட்சி தொடங்கி திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் பரவின. மேலும், இத்தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விசிக தற்போது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சிக்கு ஆதரவளித்து கூட்டணியில் இணையவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ள ஆளூர் ஷா நவாஸ் தன் மீதான அரசியல் ஊகங்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "விசிக தலைவர் திருமாவளவனுடன் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை, நீங்களாகவே ஒரு கற்பிதத்தை உருவாக்கியுள்ளீர்கள்; கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில், இங்கு வந்தவுடன் விசிக கூட்டத்தில் தான் பங்கேற்றிருக்கிறேன்” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதாக வெளியான தகவல்கள் வெறும் ஊகம் மட்டுமே என்றும், தவெகவிற்கு ஆதரவளிப்பது என்பது கட்சி ஒன்றாகக் கூடி எடுத்த ஒருமித்த முடிவு என்றும் கூறி தங்களுக்குள் இருக்கும் குழப்பங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

