ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம், இரண்டே வாரங்களில் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சண்டையை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய சூழலில், இஸ்ரேல் தனது நவீன ரக ‘ஹெர்ம்ஸ் 900’ ட்ரோனை ஈரான் வான் எல்லைக்குள் அனுப்பி உளவு பார்த்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் பறந்த இந்த ட்ரோனை அந்நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதோடு, இது அப்பட்டமான போர் நிறுத்த விதிமீறல் என்றும் சாடியுள்ளது.
இந்த மோதலால் ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடாக, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மீண்டும் மூடியுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக இனி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்று ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளுக்குச் செல்லும் எரிசக்தி விநியோகம் முற்றிலுமாகத் தடைபடும் அபாயம் உருவாகியுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சமரச முயற்சியால் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஈரான் நாகரீகமே அழிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. ஆனால் தற்போது இஸ்ரேலின் ட்ரோன் ஊடுருவல் காரணமாக, நிலைமை மீண்டும் பழையபடி பதற்றமாக மாறியுள்ளது. ஈரானின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம் எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் போர், பல நாடுகளின் பொருளாதாரத்தை ஏற்கனவே நிலைகுலையச் செய்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல், மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போரை மீண்டும் தூண்டிவிடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உறைந்துள்ளன.

