அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், பராகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆனால், இந்த ஆட்டத்தின் முடிவை விட மைதானத்திற்கு வெளியே பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே மற்றும் பராகுவே நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் செலாஸ்டி அமரில்லா ஆகிய இருவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வெடித்துள்ள வார்த்தை மோதல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியில் ஏற்பட்ட மோதல்களின் தொடர்ச்சியாக, பராகுவே செனட்டர் அமரில்லா தனது எக்ஸ் பக்கத்தில் எம்பாப்பேவை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் எம்பாப்பேவை காலனித்துவ காலத்து “அடிமை வம்சத்தைச் சேர்ந்தவர்” என்பது போலவும், பிரெஞ்சுக்காரர் போல நடிக்க முயலும் திமிர்பிடித்த, அசிங்கமான, புதுப்பணக்காரர் என்றும் மிக மோசமாக சாடியிருந்தார். இந்த நிறவெறி மற்றும் இனவெறி கலந்த விமர்சனத்திற்கு எம்பாப்பே தரப்பில் இருந்து, “அமரில்லா அரசியலுக்கே தகுதியற்ற ஒரு மோசமான பெண்” என்று கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அமரில்லா தனது சர்ச்சைக்குரிய பழைய பதிவை நீக்கிவிட்டு, எம்பாப்பேவுக்கு பகிரங்க எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “எனக்கு பிரான்ஸ் நாடு மீதோ அல்லது அதன் கால்பந்து அணி மீதோ எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை; நான் பிரெஞ்சு பள்ளியில் படித்து, அதன் கலாச்சாரத்தை மதித்து வளர்ந்தவள். என் கோபம் பிரான்ஸ் மீது அல்ல, எம்பாப்பே உனது திமிரான நடத்தையின் மீதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போட்டி முடிந்த பிறகு பராகுவே அணியின் கோல்கீப்பர் கைகொடுக்க வந்தபோது, அவரை எம்பாப்பே அவமதித்தது ஒட்டுமொத்த பராகுவே நாட்டையுமே காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக அமரில்லா எச்சரித்துள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டே அந்தப் பதிவை எழுதியதாகவும், தன் நரம்புகளில் ஓடுவது பூர்வகுடி இரத்தம் என்பதால் தனக்கு இனப்பாகுபாடு காட்டும் எண்ணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், தன்னை “அரசியலுக்கு தகுதியற்றவர்” என்று விமர்சித்த எம்பாப்பே அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால், சர்வதேச அளவில் அவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப் போவதாக அமரில்லா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகக்கோப்பை களம் தற்போது இந்த அரசியல் மற்றும் தனிநபர் மோதலால் சூடேறியுள்ளது.

