Dailyhunt
"உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேன்.. அப்போ கொடுத்தீங்களா எடப்பாடி?". முதல்முறையாக மேடையில் உண்மையை உடைத்த ஸ்டாலின்.!

"உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேன்.. அப்போ கொடுத்தீங்களா எடப்பாடி?". முதல்முறையாக மேடையில் உண்மையை உடைத்த ஸ்டாலின்.!

Tamizhan media 1 week ago

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை தான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி பேசியதற்குப் பதிலடி கொடுத்த ஸ்டாலின், தோல்வி பயத்தில் அவர் எல்லை மீறிப் பேசுவதாகக் குற்றம் சாட்டினார். தனது செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு என்றாலும், தந்தைக்கும் மகனுக்குமான உறவை பற்றிப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

கருணாநிதியின் இறுதி நாட்களைப் பற்றிக் குறிப்பிட்ட முதலமைச்சர், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் ஓய்வெடுத்தாரே தவிர, அவரை யாராலும் சிறை வைக்க முடியாது என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். நினைவாற்றலை இழந்த நிலையிலும் ‘அண்ணா’ என்று முழங்கியவர் கலைஞர் என்றும், லட்சக்கணக்கான தொண்டர்களைத் தனது இதயச் சிறையில் வைத்திருந்த ஒரு சிங்கத்தை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்றும் சாடினார்.

கருணாநிதியின் இறுதி ஆசையான மெரினா அடக்கத்திற்காக, தான் எடப்பாடி பழனிசாமியின் வீட்டு வாசலுக்கே சென்று கையேந்தி நின்ற நிகழ்வை முதலமைச்சர் நினைவு கூர்ந்தார். “எனது தந்தைக்காக அல்ல, தமிழர்களின் தலைவருக்காக கடற்கரையில் இடம் கேட்டேன், ஆனால் இரக்கமில்லாமல் மறுத்தவர் நீங்கள்” என்று அவர் பழனிசாமியைச் சுட்டிக்காட்டினார். மேலும், துரோகத்தில் எடப்பாடி பழனிசாமி 'டாக்ட்ரேட்' வாங்கியிருப்பதாகவும், பாஜகவின் கைப்பாவையாக அவர் செயல்படுவதாகவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை 'சூப்பர் ஸ்டார்' எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், மக்கள் ஏற்கனவே தங்கள் முடிவை எடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். திமுகவின் திட்டங்களைத் திருடி ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை அதிமுக செய்து வருவதாகவும், வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு 11-வது தோல்வி முத்திரையைப் பதிக்கும் என்றும் அவர் சூளுரைத்தார். மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், எடப்பாடி பழனிசாமியின் தவறான விமர்சனங்களுக்கு மக்கள் வழங்கும் முறையான தண்டனையாக இருக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media