பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட் திடீரென சரிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த பிரம்மாண்ட கட்-அவுட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அந்த வழியாக ஒரு வாகனம் கடந்து சென்ற சில நொடிகளிலேயே இந்த விபத்து நடந்ததால், நூலிழையில் பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு உயரமான கட்-அவுட் விழுந்தது அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. மழைக்காலங்களில் திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் கட்-அவுட்களின் உறுதித்தன்மையை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

