தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவு அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தனக்கு விருப்பமான தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் இருக்கும் அவர், தான் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக ஒரு சாதாரண பூத் ஏஜென்ட்டாக (PLA) பணியாற்ற விரும்புவதாகக் கூறி டெல்லி மேலிடத்திற்கு மறைமுகமான தகவலை அனுப்பியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் சூலூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியை அண்ணாமலை எதிர்பார்த்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு வழங்கியுள்ளார். இதனால் தனக்கு விருப்பமான களம் அமையாத நிலையில், வேறு மாவட்டங்களில் போட்டியிட மேலிடம் கொடுத்த அழுத்தத்தையும் அண்ணாமலை நிராகரித்துள்ளார். “கோவை மாவட்டத்தில் தொகுதி கிடைத்தால் போட்டியிடுவேன், இல்லையெனில் தொண்டனாகப் பணியாற்றுவேன்” என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் தன்னை சந்தித்த கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருண்குமாரிடம் பேசிய அண்ணாமலை, தேர்தல் நாளன்று தான் ஒரு பூத் ஏஜென்ட்டாக அமர்ந்து அவருக்காக வேலை செய்யப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஒரு கட்சியின் முக்கியத் தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் முகவராகப் பணியாற்றுவது என்பது அரிதானது. இந்த அறிவிப்பின் மூலம், தன்னை கட்டாயப்படுத்தி வேறு தொகுதிகளில் களமிறக்க வேண்டாம் என்பதை பாஜக மேலிடத்திற்கு அவர் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த திடீர் பிடிவாதம் பாஜக தேசியத் தலைமைக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. மொடக்குறிச்சி அல்லது மயிலாப்பூர் போன்ற தொகுதிகளில் அவரைப் போட்டியிட வைக்க அக்கட்சித் தலைமை முயன்று வந்த நிலையில், அண்ணாமலையின் இந்த 'பூத் ஏஜென்ட்' கருத்து வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அண்ணாமலையின் அரசியல் நகர்வு இறுதியில் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

