Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"விஜய் எக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாது". அகலக்கால் வைப்பது ஆபத்தாகவே முடியும். கிருஷ்ணசாமி கொடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

"விஜய் எக்காலத்திலும் பிரதமர் ஆக முடியாது". அகலக்கால் வைப்பது ஆபத்தாகவே முடியும். கிருஷ்ணசாமி கொடுத்த பகிரங்க எச்சரிக்கை..!

Tamizhan media 6 days ago

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மற்றும் தேனி மாவட்டம் மேகமலை பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அம்மக்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு பேச மறுப்பது கண்டனத்திற்குரியது.

மாஞ்சோலையில் தேயிலை தோட்டங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்த நிறுவனம் அரசுக்குத் தர வேண்டிய ரூ.4,655 கோடி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக 2006 வன உரிமைச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும், அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் செப்டம்பர் 12 அன்று மதுரையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற முடியாததால், கொள்கை அளவில் முரண்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. தீவிரமாக எதிர்த்த கட்சிகளோடும், ‘ஆர்.எஸ்.எஸ். பிள்ளைகள்’ என விமர்சித்தவர்களோடும் பொருந்தா கூட்டணி அமைத்துள்ள தவெக-விற்குள் தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் முரண்பாடுகள் எழத் தொடங்கியுள்ளன. சமூக வலைதள மாயை மூலம் விஜய்யை மக்கள் முதல்வராக்கி விட்ட நிலையில், அவர் 5 ஆண்டுகளைச் சிறப்பாக நிறைவு செய்வதற்கான வழியைப் பார்க்க வேண்டுமே தவிர, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர் எனக் கனவு காண்பது தவறான ஆசையாகும்; எல்லை மீறிய அகலக் கால் வைப்பது விஜய்க்கே பாதிப்பாக முடியும்.

ஆதிதிராவிடர் நலத்துறையை ‘சமூக நலத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்ததை வரவேற்ற நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு குறிப்பிட்ட சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தி ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே பேசி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார். இதனைக் கண்டித்து செப்டம்பர் 11 அன்று மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும். அதேபோல், தவெக அரசு அறிவித்துள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான ஆர்டர்களை கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்காமல், வாழ்வாதாரம் இழந்துள்ள உள்ளூர் தங்க நகை தொழிலாளர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும். மேலும், பொங்கல் இலவச வேட்டி-சேலை திட்டப் பணிகளையும் நெசவாளர்களுக்கு நேரடியாக வழங்கி அவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தடுமாறி வருவதாகவும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட மாடல் தலைவர்கள் இருக்கும்போது விசிக தலைவர் திருமாவளவனைத் தனது ‘அரசியல் ஆசான்’ என உதயநிதி கூறுவது ஏற்புடையதல்ல என்றும் கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பதே கொடூரமாக இருக்கிறது என்றும், முன்யோசனை இன்றி திட்டங்களை அறிவிக்கும் தவெக அரசு குறிப்பிட்ட ஒரு மதத்திற்கோ அல்லது சாதிக்கோ மட்டுமே சார்ந்த ஆட்சியாகச் செயல்படாமல், அனைத்து மக்களுக்கும் பொதுவான ஆட்சியாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media