Dailyhunt
"விஜய் கொடுத்த ஷாக்". கடைசி நிமிட ட்விஸ்ட். தவெக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்.. கலக்கத்தில் மற்ற கட்சிகள்..!

"விஜய் கொடுத்த ஷாக்". கடைசி நிமிட ட்விஸ்ட். தவெக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்.. கலக்கத்தில் மற்ற கட்சிகள்..!

Tamizhan media 1 week ago

ரபரப்பான அரசியல் சூழலில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடைசி நேரத்தில் இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஊத்தங்கரை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட குமரவேலுக்குப் பதிலாக, அதிமுகவிலிருந்து அண்மையில் இணைந்த இளையராஜா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல், ஓசூர் தொகுதியில் அம்ரீஸ்க்குப் பதிலாக கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் வேந்தர்கரசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தத் திடீர் மாற்றங்கள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிருப்தியடைந்த குமரவேல் சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய் இந்தத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கியத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் தவெக-விற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் விஜய்யின் கட்சிக்குக் கணிசமான வாக்கு வங்கி இருப்பதை உறுதி செய்து வருகின்றன. இருப்பினும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்களில் 106 பேர் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது தொண்டர்களிடையே விவாதப் பொருளாக இருந்த நிலையில், தற்போது ஊத்தங்கரையிலும் மாற்றுக்கட்சி பிரமுகருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகளிடையே கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தேர்தல் பரப்புரைக்கான கெடு நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்குக் காவல்துறை தரப்பில் விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகள் அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே பரப்புரைக்கு அனுமதி வழங்கப்பட்டதால், நேரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி விஜய் தனது சென்னை பரப்புரையை ரத்து செய்துள்ளார். காவல்துறையின் இத்தகைய நிபந்தனைகள் திட்டமிட்டு விதிக்கப்படுவதாகத் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஒரு பக்கம் வேட்பாளர் மாற்றம், மறுபக்கம் பரப்புரைக் கட்டுப்பாடுகள் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தவெக தனது அடுத்தகட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.

ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்தகட்ட பரப்புரை ஏப்ரல் 8-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்க உள்ளது. தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலைச் சந்திக்கும் விஜய், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்கப் பெரும் திட்டங்களை வைத்துள்ளார். மாற்றுக்கட்சியினரின் வருகை மற்றும் வேட்பாளர் மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், விஜய்யின் நேரடிப் பரப்புரை களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்புகள் அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamizhan media