சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,இன்று (அக்டோபர் 20) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை அக்டோபர் 21 ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
இதற்கிடையே, அக்டோபர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

