Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சீமான் செயல்கள் பாராட்டத்தக்கவை - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படை

சீமான் செயல்கள் பாராட்டத்தக்கவை - உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படை

Thamizh Valai 1 week ago

இராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன்,உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தொண்டி பகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு,கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் குறைந்து நீர் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஆற்றுப்படுகையில் ஞெகிழிக் கழிவுகள்,திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீர் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து, நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படுகிறது.

எனவே,வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆவணங்கள் அடிப்படையில் கூட்டு ஆய்வு நடத்தி மணிமுத்தாறு நீர்நிலையின் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்யவும்,ஆற்றில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றவும்,ஆற்றுப்படுகையில் குவிந்துள்ள ஞெகிழி மற்றும் திடக்கழிவுகளைக் அகற்றி, நீர்நிலை அதன் இயற்கையான நிலைக்குத் திரும்புவதைப் பாதுகாக்கவும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,நாம் தமிழர் கட்சி சார்பாக மணிமுத்தாறு பகுதியில் சுத்தம் செய்வதற்கு தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்தவழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.நீர்நிலையைச் சுத்தம் செய்ய நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள்,ஒரு அரசியல் கட்சி தாமாக முன்வந்து இந்த பணியில் ஈடுபடுகிறது,இதனை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அரசு,பொதுமக்கள்,அரசியல் கட்சியினர் இணைந்து செயல்பட்டால்தான் முடியும்.ஒரு அரசியல் கட்சி இது போன்ற விசயங்களில் முன்வருகிறது.அதை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.அதை விடுத்து மறுப்பு தெரிவிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றனர்.

மேலும் நீதிபதிகள்,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.அதனை நாங்கள் வரவேற்கிறோம்.எனவே நாம் தமிழர் கட்சியினரை மணிமுத்தாறு ஆற்றுப்பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்றனர்.

அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்,இதைவைத்து நாம் தமிழர் கட்சியினர் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்றார்.அதற்கு நீதிபதிகள்,இதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கப்போகிறது.இது தொடக்கமாக இருக்கட்டும். பின்பு ஒவ்வொருவராக முன்வருவார்கள்.நீர்நிலை தூய்மைப்பணியின்போது அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவேண்டாம்,தூய்மைப்படுத்துவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசலாம் என உத்தரவிட்டனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai