Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உதயநிதி பேச்சு ஏற்புடையதல்ல - கிருஷ்ணசாமி பேட்டி

உதயநிதி பேச்சு ஏற்புடையதல்ல - கிருஷ்ணசாமி பேட்டி

Thamizh Valai 2 weeks ago

புதியதமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை,தேனி மாவட்டத்தில் மேகமலை பகுதிகளில் வசிக்கும் மக்களை,வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இதையடுத்து இப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆனால் அந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பது குறித்து யாரும் பேசுவதில்லை. இந்த தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும்.மாஞ்சோலை,மேகமலை பகுதிகளில் பல ஆண்டுகளாக வாழும் மக்களை வெளியேற்றுவதைக் கண்டித்து மதுரையில் செப்டம்பர் 12 இல் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டங்களை 99 வருட குத்தகைக்கு எடுத்திருந்த நிறுவனம் அரசுக்கு ரூ.4,655 கோடி குத்தகை பாக்கி வைத்துள்ளது.இப்பணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேகமலை மற்றும் மாஞ்சோலை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும்.

தவெக பெரும்பான்மை இல்லாததால் கொள்கையில் முரண்பட்ட காங்கிரசு,கம்யூனிஸ்டு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்த்து ஆட்சி நடத்தி வருகிறது.தற்போது பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் தவெக கூட்டணிக் கட்சிகளிடம் முரண்பாடு ஏற்படத்தொடங்கியுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறையை தவெக. அரசு சமூக நலத்துறை என மாற்றியதை வரவேற்றோம்.ஆனால், சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு,ஆதிதிராவிடர் நலத்துறை எனப் பேசியுள்ளார்.அவர் குறிப்பிட்ட சாதியை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் பேசிவருகிறார்.ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

செப்டம்பர் 11 இல் தவெக அரசு மற்றும் அமைச்சர் வன்னிஅரசைக் கண்டித்து போரட்டம் தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் போராட்டம் நடத்தும்.இனிமேல் ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநலத்துறை என்றே அழைக்கவேண்டும்.

தவெக அரசு தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை அறிவித்துள்ளது.அந்தத் திட்டத்துக்காக குறிப்பிட்ட கார்பரேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழகமெங்கும் பல்லாயிரணக்கணக்காக தங்கநகைத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.அந்தத் தொழிலாளர்களுக்கு,தங்கமோதிரம் வழங்கும் திட்டப்பணிகளைப் பிரித்து வழங்கவேண்டும்.இதுபோல்,பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை,நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அவர்களிடம் வழங்கவேண்டும்.

தமிழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு திட்டம் கூட உருப்படியாக தவெக உருவாக்கவில்லை.முன்யோசனை இல்லாமல்,தவெக அரசு திட்டங்களை அறிவிக்கிறது.சமூகவலைதளங்கள் மூலம் ஒரு மாயை உருவாக்கி, விஜய்யை முதல்வராக மக்கள் அமர வைத்துவிட்டார்கள்.இதில் மக்கள் ஏமாந்தார்களா,ஏமாற்றப்பட்டார்களா என்பது தெரியவில்லை.

விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று கூறுவது ஏற்புடையதல்ல.அகலக்கால் வைத்தால் அது விஜய்க்குதான் பாதிப்பாக அமையும்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தடுமாறுகிறார்.பெரியார்,அண்ணா,கலைஞர் ஆகியோர் திராவிட மாடலின் கொள்கைத் தலைவர்களாக இருக்கும்போது,"என்னுடைய அரசியல் ஆசான் விசிக தலைவர் திருமாவளவன்" என உதயநிதி கூறுவது ஏற்புடையதா?.

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ளது.தவெக அரசு ஒரு மதத்திற்கான,ஒரு சாதிக்கான ஆட்சியாகவே உள்ளது.அனைவருக்குமான,அனைத்து மதத்திற்குமான ஆட்சியாக மாறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thamizhvalai