Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வது ஆண்டு விழா கோலாகலக் கொண்டாட்டம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வது ஆண்டு விழா கோலாகலக் கொண்டாட்டம்

கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 164-வது ஆண்டு விழா, பள்ளியின் நீண்டகால கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளைப் பறைசாற்றும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளால் விழா களைகட்டியது. நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஓமன்,தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபவுலர், நிர்வாகக்குழு உறுப்பினர் சுசிதா ராமச்சந்திரன்,தலைமை நிர்வாக அதிகாரி வி.எம். ஜான்,ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன்,ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஐலீன் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஐசிஎஸ்இ பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ்,ஸ்டேன்ஸ் சர்வதேசப் பள்ளி முதல்வர் ஜார்ஜினா,முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ராஜ்குமார் மற்றும் டி. ஸ்டேன்ஸ் அண்ட் கம்பெனியின் முழுநேர இயக்குநர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கேஎம்சிஎச் மருத்துவமனையின் மூத்த மனநல ஆலோசகரும்,நேர்மறை உளவியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.அவர் பேசுகையில், மாணவர்களிடையே சுதந்திரம், ஒழுக்கம்,உணர்வுசார் நல்வாழ்வு மற்றும் பொறுப்பான வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்."உண்மையான சுதந்திரம் என்பது விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாத நிலை அல்ல. வெளிப்புறக் கட்டுப்பாட்டிலிருந்து சுயக் கட்டுப்பாட்டை நோக்கிய மாற்றமே உண்மையான சுதந்திரம்" என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரம் பொறுப்புணர்வு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இணைந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் தவறுகளைப் புரியவைத்து திருத்தும் அணுகுமுறையை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.தண்டனை தற்காலிக முடிவுகளைத் தரக்கூடும் என்றாலும், நீண்ட காலத்தில் அது அதிருப்தி, பின்வாங்குதல் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்தார்.

இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக்காட்டிய அவர், சுயமரியாதை,சுய மதிப்பு மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் திறனை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான முன்மாதிரிகளாகத் திகழ வேண்டும் என்றும், குழந்தைகள் வார்த்தைகளை விட செயல்களையே அதிகம் பின்பற்றுவார்கள் என்றும் கூறினார்.

மேலும், சமூகத் திறன்கள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு மற்றும் மன உறுதியை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.மாணவர்கள் தங்கள் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள, முறையான வழிகாட்டுதலுடன் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குழந்தைகளின் குறைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் பலம் மற்றும் திறமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்ட டாக்டர் சீனிவாசன், பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பெறும் சாதனைகளும் உருவாகும் நினைவுகளும் வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படும் என்றார்.

விழாவின் முக்கிய அம்சமாக, கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டதற்கான 'ஹவுஸ்' விருதை 'டைகர் ஹவுஸ்' அணி வென்றது.முன்னதாக பள்ளி முதல்வர் பி.ஏ. ஜான் ஸ்டீபன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து,நடப்பாண்டில் பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை விளக்கும் ஆண்டு அறிக்கையை அவர் சமர்ப்பித்தார்.விழாவில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Thandora