தி இந்து தமிழ்

968k Followers

பழுவேட்டரையர்கள் யார்?

02 Oct 2022.08:30 AM

'பொன்னியின் செல்வன்' கதை எழுதப்படுவதற்கு முன், தமிழ்நாட்டு வரலாற்றாய்வில் ஈடுபட்டிருந்த சிலருக்கு மட்டுமே அறிமுகமாயிருந்த பழுவேட்டரையர்கள், அக்கதை வெளியான பிறகு நாடறிந்த சிற்றரசர்களாக மாறினர்.

வல்லவரையன் வந்தியத்தேவனின் தொடக்கப் பயணத்திலேயே வெளிச்சமாகும் பெரிய பழுவேட்டரையர், 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தின் இணையற்ற கதைநாயகர்களுள் ஒருவராகவே நிலைத்துவிடுகிறார். கல்கியின் வர்ணனைகளில் அந்த நெடிய திருமேனியும் அவருடைய ஓங்காரமும் சிம்மக் குரலும் நந்தினியிடம் அவர் உருகும் நொடிகளும் கதை படிப்பார் உள்ளங்களில் வந்தியத்தேவனுக்கு இணையான இடத்தை அவருக்கும் அளித்துவிடுவதை யார் மறுக்க முடியும்? 'பொன்னியின் செல்வ'னால் சிகர உச்சியைப் பெற்ற இந்தப் பழுவேட்டரையர் யார்? அவர் மரபின் வரலாறு என்ன?

தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலவிய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளுக்குத் துணையாகப் பல சிற்றரச மரபுகள் இருந்தன. அம்மரபுகளுள் சில பல்லவர், பாண்டியர், சோழர் காலத்திலும் தொடர்ந்தன. புதிய சிற்றரசர்களும் காலந்தோறும் தோன்றிப் புதுப்புது இனங்களை வளர்த்தனர். அப்படிப் புதிதாய்த் தோன்றிய சிற்றரச மரபுகளுள் ஒன்றுதான் பழுவூர் அரச மரபு. இப்போதைய அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் எனும் மூன்று ஊர்களும் அவற்றைச் சுற்றியிருந்த பகுதிகளும் பழுவேட்டரையர் என்றறியப்படும் பழுவூர் அரசர்களின் கீழ் செழித்திருந்தன.

சோழ தேவியான அருமொழிநங்கை: பழுவேட்டரையர்களின் வரலாறு முதல் ஆதித்த சோழருடன் தொடங்குகிறது. ஐயாற்றுக் கோயிலிலும் கீழையூர் அவனிகந்தர்வ ஈசுவரகிருகத்திலும் உள்ள ஆதித்தரின் கல்வெட்டுகள் இம்மரபின் மூத்தோராகப் பழுவேட்டரையர் குமரன்கண்டனை முன்னிலைப்படுத்துகின்றன. அவருடைய இளவல், குமரன்மறவனை அறிய நான்கு கல்வெட்டுகள் உதவுகின்றன. அவற்றுள் ஒன்று, ஆதித்தசோழரின் மகனான முதல் பராந்தகர் காலத்தது. ஆதித்தசோழரின் தொடக்க காலத்தில் குமரன்கண்டனும் அவரது இறுதிக் காலத்தில் குமரன்மறவனும் பழுவூர் அரியணையில் இருந்தமை கல்வெட்டுகளால் உறுதியாகிறது. குமரன்மறவனின் ஆட்சி பராந்தகர் காலத்திலும் தொடர்ந்தது. அவ்விரு மன்னர்களின் காலத்தில் மேலப்பழுவூரும் கீழையூம் 'மன்னு பெரும் பழுவூர்' என்று அறியப்பட்டன. இன்றைய கீழப்பழுவூர் அந்நாளில் சிறுபழுவூராகக் குறிக்கப்பட்டது. கீழையூரில் இன்றும் சிறப்புடன் விளங்கும் அவனிகந்தர்வ ஈசுவரகிருக வளாகமும் மேலப்பழுவூரிலுள்ள பகைவிடை ஈசுவரமும் இவ்விரு வேந்தர்கள் காலத்தில் கட்டப்பெற்றவை. அவனிகந்தர்வ ஈசுவரகிருகத்தின் தென், வடவாயில் கோயில்கள் இரண்டுமே சிற்ப அற்புதங்கள். பகைவிடை ஈசுவரத்தின் எழுவர் அன்னையர், தவ்வைத்தேவி சிற்பங்கள் அக்காலத்தின் இணையற்ற செதுக்கல்கள்.

நாட்டைப் பாதுகாக்கவும் எல்லைகளைக் காப்பாற்றவும் அக்காலப் பேரரசர்கள் தம் நாட்டைச் சூழவிருந்த பல சிற்றரசுகளுடன் மணஉறவு மேற்கொண்டனர். அவ்வழக்கைப் பின்பற்றியே சோழ மண்டலத்தின் ஒருபகுதியாக விளங்கிய பழுவூரை ஆண்ட பழுவேட்டரைய மரபில் பராந்தகர் திருமண உறவுகொண்டார். அவர் காலத்தில் பழுவூர் அரியணையில் இருந்த குமரன்மறவனின் மகளான அருமொழிநங்கை பராந்தகரின் தேவியாகி அரிஞ்சய சோழரைப் பெற்றெடுத்தார். இந்த அரிஞ்சயர்தான் சுந்தரசோழரின் தந்தை. இவருக்குத்தான் தம் ஆட்சிக் காலத்தில் பள்ளிப்படைக் கோயில் அமைத்து, அதற்கு அரிஞ்சிகை ஈசுவரம் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார் முதல் ராஜராஜர். பராந்தகர், அருமொழி திருமணம் பற்றிக் குறிப்பிடும் உதயேந்திரம், அன்பில் செப்பேடுகள் பழுவேட்டரையர்களைக் கேரளர்களாய்க் குறிக்கின்றன. ஆதித்தர், பராந்தகர் ஆட்சியில் சோழர்களுக்கும் சேரர்களுக்கும் இடையில் அழுத்தமான நட்புறவு இருந்தது.

யார் பெரிய பழுவேட்டரையர்?: குமரன்மறவனைப் பின்பற்றிக் குமரன்கண்டனின் மகனான கண்டன்அமுதன் பழுவூர் அரசரானார். பராந்தகரின் வெள்ளூர்ப் போரில் பெருவீரம் காட்டியவராகக் கொண்டாடப்படும் இப்பழுவேட்டரையரை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் குமரன்மறவனின் மகனான மறவன்கண்டன். பழுவூர் அரச மரபினர் அனைவருமே தங்கள் பெயரின் முன்னொட்டாக அவர் தம் தந்தையார் பெயரைக் கொண்டிருந்ததால், அவர்களை வரிசைப்படுத்துவதும் அடையாளப்படுத்துவதும் எளிதாகிறது. முதல் பராந்தகரின் மூத்த மகனான ராஜாதித்தர் தக்கோலப் போரில் உயிரிழந்தார். பராந்தகருக்குப் பிறகு சோழ அரியணை ஏறிய கண்டராதித்தரும் அரிஞ்சயரும் குறுகிய காலமே சோழ நாட்டை ஆண்டனர். அரிஞ்சயருக்குப் பிறகு அரசரான அவர் மகன் சுந்தரசோழர், 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவர் காலத்தில் பழுவூர் மன்னராகப் பெருமையுடன் விளங்கியவர் மறவன்கண்டன். சுந்தரசோழரை அடுத்து ஆட்சிக்குவந்த உத்தமசோழரின் தொடக்கக் காலத்திலும் பழுவூர் அரியணையில் தொடர்ந்த இப்பழுவேட்டரையர் காலத்தில்தான், சம்பந்தரால் பாடப்பெற்ற கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் கற்றளியாக்கப்பட்டது. இம்மறவன்கண்டனே 'பொன்னியின் செல்வன்' குறிப்பிடும் பெரிய பழுவேட்டரையர். ஆனால் கல்கி குறிப்பிடுவதுபோல், உண்மையில் இவருக்குத் தம்பி உறவில் யாருமில்லை. ஆனால், மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுள் கண்டன்சுந்தரசோழனும் கண்டன்சத்ருபயங்கரனும் உத்தமசோழர் ஆட்சியின் பிற்பகுதியிலும் கண்டன்மறவன் முதல் ராஜராஜர் ஆட்சிக் காலத்திலும் பழுவூர் அரியணையில் இருந்தனர்.

கண்டன்மறவனின் காலம்: பராந்தகரைப் போலவே உத்தமசோழரும் ராஜராஜரும் அவர் மகன் ராஜேந்திரரும் பழுவூர் அரச மரபுடன் மணவினை கொண்டனர். கல்வெட்டுகளில் புகழ்பெற்று விளங்கும் ராஜராஜரின் அரசியருள் ஒருவரான பஞ்சவன்மாதேவி பழுவூர் அரச மரபைச் சேர்ந்தவர். அவர் பெயரில்தான் பழையாறையில் பள்ளிப்படை எடுத்தார் ராஜேந்திரர். இவ்வம்மையின் தந்தையார் கண்டன்சத்ருபயங்கரன் மிகக் குறுகிய காலமே அரியணையில் இருந்தார். ராஜேந்திரர் ஆட்சிக் காலத்தில் பழுவூரை ஆண்ட கண்டன்மறவனே பழுவேட்டரைய மரபின் இறுதி மன்னராக ஒளிர்கிறார். பழுவூர் அரசர்களைப் பற்றி இதுநாள்வரை அறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் அதிக எண்ணிக்கையிலானவை அவர் காலத்தில் பொறிக்கப்பட்டவையே. இராஜராஜர் காலத்தில் மேலப்பழுவூரில் அவர் எடுப்பித்த திருத்தோற்றமுடையார் கோயில் காலப்போக்கில் சிதைவுற்றபோதும், அதன் கற்கள் பின்னாளில் பகைவிடை ஈசுவர வளாகத்தில் அமைந்த அம்மன் கோயிலில் இடம்பெற்று வரலாற்றை வாழவைத்தன.

முடிந்த மரபு: சோழ, கேரள உறவுகள் வலிமையாகவும் இணக்கமாகவும் இருந்த பொதுக்காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பழுவூர் அரசர்களாக உரிமையுடன் வெளிப்படும் பழுவேட்டரையர்கள், முதல் ராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுடன் (பொ.கா.1020) வரலாற்றுக் களத்திலிருந்து மறைகிறார்கள். ராஜராஜர், ராஜேந்திரர் காலத்தில் நிகழ்ந்த சோழக் கேரளப் போர்கள் அதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கலாம். இருபுற உறவுகள் நலிந்த நிலையில், கேரளக் கால்வழியினராய்ச் சோழ மண்டலத்தின் நடுவில் பழுவேட்டரையர்கள் ஆட்சியில் தொடர்வதை அரசியல் சூழல்கள் அனுமதிக்காமல் போனமை இயல்பானதே. நான்கு சோழ வேந்தர்களுடன் மணஉறவு கொண்டு ஏறத்தாழ 139 ஆண்டுகள் பழுவூரை வளப்படுத்திய பழுவேட்டரையர் மரபு திடீரென முடிவுக்கு வந்தாலும், கால வெள்ளத்தில் நீந்தி அது வரலாற்றில் ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அம்மரபின் கலைப் பிழம்புகளாகப் பழுவூரில் திகழும் எழிலார்ந்த கோயில்களும் கல்கியின் 'பொன்னியின் செல்வனும்' மக்கள் பார்வையில் உள்ளவரை பழுவேட்டரையர்கள் நிலைத்திருப்பார்கள். வரலாறு இப்படித்தான் வேர்களை விழுதுகளாக்குகிறது.

- இரா.கலைக்கோவன், வரலாற்றாய்வாளர், தொடர்புக்கு: rkalaikkovan48@gmail.com

உண்மைத் தேடல் அவசியம்

'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், சோழர் வரலாறு குறித்து அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே நேரம், தவறான அல்லது வரலாற்று ஆதாரங்கள் இல்லாத கருத்துகளே பெரும்பாலும் கவனப்படுத்தப்படுகின்றன.

அவற்றுக்கு மாறாக இந்தக் கட்டுரையின் ஆசிரியரான வரலாற்றாய்வாளர் இரா.கலைக்கோவன் வரலாற்று ஆதாரங்களுடன் 'பழுவூர்ப் புதையல்கள்', 'பழுவூர்: அரசர்கள், கோயில்கள், சமுதாயம்' ஆகிய குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்: கதையா, வரலாறா?' என்கிற கட்டுரை இதே பகுதியில் ஜூலை 31 அன்று வெளியானது.

Source : www.hindutamil.in

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: The Hindu Kamadenu