Saturday, 28 Mar, 8.58 pm தி இந்து தமிழ்

தமிழ்நாடு
கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை உடனடியாக முன் பணமாக வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு லட்ச ரூபாய் சுழல் நிதியை வழங்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நிவாரண அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி ஆளுநரும் வெளியிட்டுள்ளனர்.

வங்கிக்கடன் தவணைகள் செலுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருக்கின்றார். இதனை ஆறு மாதங்களுக்கு தள்ளிவைத்து அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் இவை மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

வங்கிகள், கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தாலும், மார்ச் மாதத்துக்கான தவணைக் காலம் முடிந்துள்ள நிலையிலும் ஏப்ரல் மாதத்துக்கான தவணை மார்ச் 31 ஆம் தேதி எடுக்கப்பட்டுவிடும் என்ற சூழலிலும் மக்களுக்கு மே மாத தவணை மட்டுமே தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதாவது ரிசர்வங்கியின் அறிவிப்பில் ஒரு மாதம் மட்டுமே பயனுள்ளதாக அமையும் நிலையுள்ளது.

எனவே, இது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு நிவாரணமாக அமையாது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மூன்று மாதங்களுக்கும் மேல் இந்த சிக்கல் தொடரும் என்பதை ஊகிக்க முடிகிறது. எனவே குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதுபோலவே ஏழை எளிய மக்கள் உடனடியாக கடன் பெறுவதற்கு நகைக்கடன் திட்டத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, வட்டியில்லாமல் மூன்று லட்ச ரூபாய் வரை நகைக் கடன் வழங்குவதற்கு உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.

100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் 30 நாள் ஊதியத்தை உடனடியாக முன்பணமாக வழங்குமாறு மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். அதுபோலவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு லட்ச ரூபாய் சுழல் நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

சிறு, குறு தொழில்களைக் காப்பாற்றுவதற்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வசூலையும், வருமான வரி செலுத்துவதற்கான காலத்தையும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை ஆறு மாதங்களுக்கான பொருட்களை முன்கூட்டியே கொடுக்க முடியும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருந்தார்.

அந்த அளவுக்கு கையிருப்பு இருக்கும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு தலா 30 கிலோ அரிசி அல்லது கோதுமை ஐந்து கிலோ பருப்பு, ஐந்து கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கரோனா தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க வேண்டுமென்றால் குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெளியூர்/ வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் கட்டாயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறி தென்பட்டாலோ அல்லது நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டவரோடுதான் தொடர்பில் இருந்ததாகத் தெரிந்தாலோ அப்படியானவர்கள் தாமே முன்வந்து தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கு எந்தவகையிலும் எதிர்ப்புத் தெரிவிப்பதோ அல்லது இதனை அலட்சியப்படுத்துவதோ கூடாது. அரசு எடுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நம்முடைய நலனுக்கானவைதான் என்பதை உணர்ந்து பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அப்போதுதான், இந்த பேராபத்தில் இருந்து நாம் அனைவரும் தப்பிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்'.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Source : www.hindutamil.in

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: The Hindu Kamadenu
Top