தமிழ்நாடு
கரூர், குளித்தலை அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,72,500 பறிமுதல்

கரூர், குளித்தலை அருகே உரிய ஆவணங்களின்றி கார் மற்றும் மினி லாரியில் கொண்டு செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,72,500 சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டன.
கரூர் மாவட்டம் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்புக் குழு அணி 6இன் அலுவலர் அமுதா தலைமையில் கரூர் அருகே ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவில் இன்று (மார்ச் 7-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே சென்ற காரில் சோதனையிட்டபோது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த சிவபாலன் (40) உரிய ஆவணங்களின்றி ரூ.67,500 கொண்டு சென்றது கண்டறியப்பட்டு அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு கரூர் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஈஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்தொகை பின் கரூர் சார்நிலை கருவூலத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
குளித்தலை அருகே ரூ.1.05 லட்சம் பறிமுதல்
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அணி 2 குழு அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குளித்தலை அருகே வதியம் பிரிவு சாலையில் இன்று (மார்ச் 7-ம் தேதி) காலை 7.15 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மினி லாரியில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சுதாகரன் (22) உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,05,000 பறிமுதல் செய்யப்பட்டு குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். அத்தொகை பின் குளித்தலை சார்நிலை கருவூலத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
6 இடங்களில் ரூ.7,76,300, நோட்டுப் புத்தகங்கள் 3,180 பறிமுதல்
அரவக்குறிச்சி தொகுதி நிலையான கண்காணிப்புக் குழு அணி 5 முன்னூரில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு நடத்திய சோதனையில் ரூ.2,29,300, கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும் படை குழு அணி 3 அய்யம்பாளையத்தில் 3-ம் தேதி நடத்திய சோதனையில் ரூ.82,000, அரவக்குறிச்சி தொகுதி பறக்கும் படை குழு அணி 1 தளவாபாளையத்தில் 4-ம் தேதி நடத்திய சோதனையில் ரூ.2,92,500 பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் பறக்கும் படை குழு அணி 3 கடந்த 4-ம் தேதி இரவு சணப்பிரட்டியில் நடத்திய சோதனையில் முதல்வர், அமைச்சர் புகைப்படங்கள் அச்சிட்ட 3,180 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்று (மார்ச் 7-ம் தேதி) இரு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1,72,500 என இதுவரை 6 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.7,761,300 மற்றும் 3,180 நோட்டுப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.