தமிழ்நாடு
வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்ததையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9652 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 67.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை விரைவில் நிரம்பும் நிலை உள்ளது. இதனால் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படும். 68.50 அடியை எட்டியவுடன் இரண்டாம் வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படவுள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.
வைகை அணை ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.