ADMK MLA'S In Puducherry: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை இந்நிலையில் தவெக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்றுமுன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய லால்குடி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் கூறினார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பானது. அதேவேளையில் தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று காலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு வந்த எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் இபிஎஸ் இல்லத்துக்கு காரில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் சார்ப்பில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை கீரின் வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தவெக தரப்பு மறுத்தது. தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 11 பேரின் ஆதரவு தேவைப்படும் நிலையில் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரி இடதுசாரிகள், விசிகவுக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது.
: "தோல்வியும் புதிதல்ல.. துரோகமும் புதிது அல்ல.. காலம் பதில்சொல்லும்.." - காங்கிரஸை விமர்சித்த டி.ஆர்.பாலு
இந்நிலையில் தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்தது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது .திமுகவுடனான 20 ஆண்டுகால கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 5ல் வென்று, தற்போது தவெக அணிக்கு தாவியுள்ளது
இந்நிலையில் தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்க ளின் பட்டியலை வழங்கினார்.ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் இன்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததால், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க உள்ள தாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது.இதற்கு ஏற்றார்போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தின.
: "அரசியலில் கூட்டணிகள் சேர்வதும்,பிரிவதும் இயல்பானது தான்" -ஜோதிமணி எம்.பி
தவெக தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசை 6 மாதங்களுக்கு திமுக தொந்தரவு செய்யாது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு அளித்த பேட்டியில் திமுகத் தலைவர் ஸ்டாலின் கூறினார். தனது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முக்கிய நலத் திட்டங்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை வரும் அரசு நிறைவேற்றும் என திமுக எதிர்பார்க்கிறது. பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவது என்ற TVKயின் பிரச்சார உறுதிமொழி குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், அதை செயல்படுத்துவது கடினம் என்றும், தற்போதைய ரூ.1,000 உரிமைத் தொகையை தொடர்ந்து செயல்படுத்தவும் பரிந்துரைத்தார்.
புதுச்சேரி ரிசார்ட்
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் சி.வி.சண்முகம் தலைமையில், ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட 27 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. நேற்று இரவு இவர்கள் புதுச்சேரி வந்து தங்கியுள்ளனர்.

