தமிழ்நாடு சட்டப்பரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 23 தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்று வெளியாகிறது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இம்முறை கூடுதலாக 7 தொகுதிகளை பெற்றுள்ளது.
இந்நிலையில, 27 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக மேலிடம் நேற்று வெளியிட்டது. இதில் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் போயலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, " அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர் தமிழகம் முழுவதும் தேர்தல் பணி செய்ய விரும்புகிறார். ஒரு தொகுதிக்குள் அவர் முடங்காமல் மாநிலம் முழுவதும் பரப்புரை செய்யவுள்ளார்" எனத் தெரிவித்தார்.
கோவையில் களமிறங்க திட்டம்?
பாஜக வட்டார தகவல்களின் படி, இந்த தேர்தலில் அண்ணாமலை எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம் விரும்பியுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அண்ணாமலை கோவையில் எதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு அதற்கான பணிகளையும் செய்து வந்துள்ளார். கோயம்புத்தூர் தெற்கு, வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை (தனி) என 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இதில் அண்ணாமலை கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்ததாகவும் தெரிகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் 27 தொகுதிகளில் ஒப்பந்தமானாலும் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெறவில்லை எனக் கூறப்பட்டது.
: 'அரை சதவீதம் வாங்குன கட்சிக்கு 10 சீட்டு..' - தேமுதிகவை சீண்டிய எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக சீட்டு பேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிக தெளிவாக காய்நகர்த்தி விட்டார். அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்த கவுண்டம்பாளையம் தொகுதியை பாஜகவுக்கு கொடுக்காமல் கோவை வடக்கு தொகுதியை மட்டும் ஒதுக்கியுள்ளார். கோவை வடக்கு வேட்பாளர் அண்ணாமலையா? வானதி சீனிவாசனா? என பாஜகவினர் முட்டி மோதிக்கொள்ளட்டும் என விட்டுவிட்டார் எனக் கூறப்படுகிறது. கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவை வடக்கை விட்டு கொடுக்க மனமில்லை.
NDA வேட்பாளர்களுக்கு பிரச்சாரம்
அண்ணாமலையை திருப்பூர் தெற்கு, அவிநாசி, மொடக்குறிச்சி போயிட பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக அதற்கு அண்ணாமலை இசைவு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஏப்ரல் 02-வரை அண்ணாமலை கோவை வடக்கு வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தொண்டர்கள் எண்ணியிருந்தார். பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் பலரும் தங்களது சமூகவலைத்தளப்பதிவில் கோவை அண்ணாமலை போட்டியிடுவார் என்ற ரீதியில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர். பாஜக மேலிடம் நேற்று வெளியிட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை
வேட்பாளர் பட்டியல் வெளியானவுடன் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் , " 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு பாஜக-வின் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு தொண்டனாக நான் தோளோடு தோள் நின்று, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்து, வெற்றி பெற்ற எங்கள் பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரச்சாரம் செய்வேன்." எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருந்தேன். பாஜக மையக்குழு கூட்டத்தில் கூட போட்டியில்லை என்பதை தெரிவித்து இருந்தேன். மையக்குழு அனுப்பிய வேட்பாளர்கள் பட்டியலில் கூட என் பெயர் இல்லை. நான் ஏற்கனவே பியூஷ் கோயல் மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி ஆகியோரிடமும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறியிருந்தேன். கட்சி தலைமை எனது கருத்துக்கு மதிப்பளித்து. என்னை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி. இந்த தேர்தலில் பாஜகவில் 27 வேட்பாளர்கள் இருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
எந்த தொகுதியையும் கேட்கவில்லை
நான் நேற்று கேரளாவில் இருந்தேன். இன்று தமிழ்நாட்டில் இருக்கிறேன். மாலையில் புதுச்சேரியில் இருப்பேன். நாளை நான் கேரளாவின் கண்ணூரில் இருப்பேன். சட்டமன்றத் தேர்தலில் வரும் 23 வரை பரப்புரை செய்வதுதான் எனது பணி. நான் எந்த ரேஸிலும் இல்லை. நான் எந்த தொகுதியை கேட்கவில்லை. எங்கும் போட்டியிடவில்லை. நான் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். கோவையில் சிட்டிங் எம்.எல்.ஏ இருக்காங்க அவங்க போட்டியிடுவது தான் முறை.
அதேபோல் மொடக்குறிச்சி போன்ற இடங்களில் நிறைய பேர் பணி செய்திருக்கிறார்கள். எல்லா தொகுதிகளில் கட்சிக்கு பணி செய்தவர்கள் போட்டியிடுகிறார். நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை. அது என்னுடைய பழக்கம் இல்லை. என்னுடைய வேலை சட்டமன்றத் தேர்தலில் வரும் 23 வரை பரப்புரை செய்வதுதான் அதன்பின்னர் நான் பேசுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

