Bangalore Trains: பெங்களூர் மக்களின் 19 ஆண்டு கால எதிர்ப்பார்ப்பு நிஜமாகி விட்டது. விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி பெங்களூரு - விசாகப்பட்டினம் இடையே வழக்கமான வாராந்திர ரயில் சேவைகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது..
கர்நாடக தலைநகரான பெங்களூருக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து அடிக்கடி வரும் மாணவர்கள், தொழிலாளிகள், பெண்கள், முதியவர்களின் பயணங்களில் நீண்ட ஆண்டு கோரிக்கையாக இருந்த விசாகப்பட்டினம் - எஸ்.எம்.வி.டி பெங்களூரு வாராந்திர ரயில் சேவை வரும் மே 10 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. விசாகப்பட்டினம் ஒரு முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாகவும் இருப்பதால், இந்த இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது. முறையான ரயில் சேவை அமைந்தால், வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும்.தற்போது வாரத்திற்கு சில முறை மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயில்களை நிரந்தர தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருந்தது. விசாகப்பட்டினம் - பெங்களூரு தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், தெற்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்கு கடலோர ரயில்வே அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கி வந்தன.
Bangalore Train: பெங்களூர் ரயில் சேவை
தற்போது சிறப்பு ரயில் சேவையாக இருக்கும் இந்த பயணம், இனி வாராந்திர நிரந்தர சேவையாக மாற போகிறது. வரும் மே 10, 2026 முதல், தற்போதுள்ள சிறப்பு ரயில் (08581/08582) 18509 மற்றும் 18510 என்ற புதிய வழக்கமான எண்களின் கீழ் இயக்கப்படும். ரயில் எண் 18509, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 15:20 மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு, 15:53 மணிக்கு துவ்வாடாவைக் கடந்து, அடுத்த திங்கட்கிழமை 13:50 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூருவை வந்தடையும்.
மறு திசையில், ரயில் எண் 18510, மே 11, 2026 முதல் தனது வழக்கமான சேவையைத் தொடங்கும். இது ஒவ்வொரு திங்கட்கிழமையும் 15:50 மணிக்கு எஸ்.எம்.வி.டி பெங்களூருவிலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை 13:30 மணிக்கு விசாகப்பட்டினத்தை வந்தடையும். துவ்வாடா, அனகாபள்ளி, ஏலமஞ்சிலி, சமல்கோட், ராஜமுந்திரி, ஏலூர், விஜயவாடா, ஒங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்கார்ப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களுக்கு இந்த ரயில் அத்தியாவசிய இணைப்பை வழங்கும்.
பயணிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 18 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் ஒரு பெட்டி 2ஆம் வகுப்பு ஏசி, ஒரு எட்டி 3ஆம் வகுப்பு ஏசி, நான்கு பெட்டி 3ஆம் வகுப்பு எகானமி, ஆறு பெட்டி ஸ்லீப்பர் வகுப்புகள், நான்கு பெட்டி பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் இரண்டு பெட்டி எஸ்.எல்.ஆர்/பிரேக் வேன்கள் இடம்பெறும். விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே புதிதாக முறைப்படுத்தப்பட்ட இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் இன்று மின் தடை அறிவிப்பு.. 2 மணி நேரம் இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை: அதே போல் விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக பரிசீலனையில் உள்ளது. இது குறித்து ரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கூடிய விரைவில் இதற்கு முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளது.

