Chtihra Pournami Worship: சித்திரை மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள், உற்சவங்கள் நினைவிற்கு வரும்.
சித்திரை மாதத்தின் மிக முக்கியமான விசேஷங்களில் ஒன்று சித்திரை மாதப் பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி). 2026ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மே மாதம் 1ஆம் தேதி வருகிறது. இந்த நாளில்தான் சித்திரகுப்தர் அவதரித்தார் எனப் புராணங்கள் கூறுகின்றன. மனிதர்களின் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் கணக்குகளை பதிவு செய்து வைத்திருப்பவர் சித்திரகுப்தர் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அவரை வழிபடுவதால் வறுமை நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மரணத்தின் கடவுளாக கருதப்படும் எமதர்மராஜனின் உதவியாளராக செயல்படுபவர் சித்திரகுப்தர். மனிதர்கள் மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களின் பாவ புண்ணிய கணக்குகளையும் துல்லியமாக பதிவு செய்கிறார் என்பதே ஐதீகம்.
சித்திர குப்தர் அவதரித்த கதை - Story of Chithra Pournami and Chithraguptar
சித்திரகுப்தரின் பிறப்பு குறித்து பல புராணங்களில் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. கயிலை புராணத்தின் படி, சிவபெருமான் பார்வதி தேவியால் வரையப்பட்ட ஓவியத்திற்கு உயிர் கொடுத்ததே சித்திரகுப்தரின் அவதாரம் எனப்படுகிறது. அந்த அவதாரம் சித்ரா பௌர்ணமி தினத்திலேயே நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு கருத்துப்படி, சூரிய புராணத்தில் சித்திரகுப்தர் எமனின் சகோதரர் என்றும், சூரியதேவர் மற்றும் நீளாதேவி ஆகியோருக்கு பிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரம்மபுராணத்தில், பிரம்மதேவன் தியானத்தில் இருந்தபோது அவரின் உடலில் இருந்து தோன்றியவரே சித்திரகுப்தர் என கூறப்படுகிறது. அவர் தோன்றும் நேரமே கையில் எழுதுகோல் மற்றும் மையுடன் இருந்தார் என்றும் ஆன்மீக நூல்களில் சொல்லப்படுகிறது.
சிவபெருமானின் அருளால், எமனுக்கு உதவியாக சித்திரகுப்தருக்கு முடிவில்லா கணக்கு புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் உயிரினங்களின் பாவ புண்ணியங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன என நம்பப்படுகிறது.
Chatru Samhara Mantram in Tamil: எதிரிகளை விரட்டும் சக்திவாய்ந்த முருக மந்திரம் - எப்படி ஜபிக்க வேண்டும்? முழு விளக்கம்
பாவங்களைத் தீரும் சித்ரா பௌர்ணமி வழிபாடு
பொதுவாக சித்ரா பௌர்ணமி அன்று, மக்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, நல்ல வாழ்வை வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். சித்திரகுப்தரை வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் அந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்வதும் வழக்கம். சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தரை மனமார வழிபட்டு, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன் அதிகரிக்க வேண்டி பிரார்த்தனை செய்தால், வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. காரிய வெற்றி, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், பதவி உயர்வு போன்ற நன்மைகளுக்காகவும் சித்திரகுப்தரை இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி வழிபாடு - Chithra Pournami Worship
சித்ரா பௌர்ணமி அன்று, அதாவது வெள்ளிக்கிழமை அன்று ராகு காலம் தவித்து காலையில் அல்லது மாலை நேரத்தில் ஏதேனும் பாயசம் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பு வைத்து படைத்து, நெய் விளக்கேற்றி மனதார சித்திரகுப்தரை பிரார்த்தனை செய்யலாம். இனிப்பு பாயசம் மற்றும் திரவ உணவுகளை தானமாக வழங்கலாம். தெரிந்தும் தெரியாது செய்த பாவங்கள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்து கொள்வது, பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். வாய்ப்பு உள்ளவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தர் கோவிலுக்கு சென்று நெய் தீபமேற்றி பிரார்த்தனை செய்து வரலாம்.

