Dailyhunt
CVe Shanmugam ADMK Split : அதிமுக 2ஆக உடைகிறதா? சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆலோசனை.. 30 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு?

CVe Shanmugam ADMK Split : அதிமுக 2ஆக உடைகிறதா? சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி ஆலோசனை.. 30 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு?

CVe Shanmugam ADMK Split : 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு இதுவரை கண்டிராத ஒரு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது விஜயின் தமிழக வெற்றி கழகம்.

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில், களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்று ஆளும் திமுகவை 2ஆம் இடத்திற்கும், அதிமுகவை 3ஆம் இடத்திற்கும் தள்ளி இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றிய தேர்தல்

தேர்தலில் சுனாமி போல விஜய்க்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவ நேர்ந்தது. 15 அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்களே கிடைத்துள்ளன. தொங்கு சட்டசபை அமைந்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் தவெகவுக்கு 12 இடங்கள் தேவைப்படுகிறது. இதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, பாமக போன்ற கட்சிகளிடம் தாவேகா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய் ஏற்கனவே கூட்டணி ஆட்சி என அறிவித்திருப்பதால் அவருடன் கூட்டணியில் இணைய மற்ற கட்சிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக - குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப்-10 வேட்பாளர்கள் யார்?

அதிமுகவில் கலகம்

இதற்கிடையே 47 இடங்களை வென்றுள்ள அதிமுகவும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கலகக் குரல் எழுந்துள்ளது. மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் (CVe shanmugam) தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சி.வி. சண்முகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றோர் ஆதரவு அளித்திருப்பதாக கூறப்படுவதால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



ஏற்கனவே 5 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இல்லாத நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல விடாமல் தடுப்பதற்கும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு தவெகவுடன் அதிகார பகிர்வை மேற்கொள்வது அவசியம் என சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சி.வி.சண்முகம் ஆலோசனை

இதில் முக்கியமான முன்னேற்றமாக, சென்னையில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் வருகை தந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழையும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள் யார்?

தவெகவுக்கு அதிமுக ஆதரவு தரும் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி சரியான முடிவு எடுக்காவிட்டால், அதிமுகவை இரண்டாக உடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, 'அதிமுக, தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளிக்குமா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சி.வி. சண்முகம் கட்சியின் தலைமையே இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என ஒற்றை பதிலை தந்தார்.

சி.வி சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் இந்த திடீர் ஆலோசனை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.



இந்த குழப்பங்களுக்கு இடையே தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சற்று முன்னதாக அவரது வீட்டில் சென்று சந்தித்து ஆலோசித்துள்ளார். இதனால் தவெக , ஆட்சியமைக்க அதிமுகவின் ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi