Heat Stroke என்பதை வெப்பத்தின் காரணமாக எற்படும் பக்கவாதம் அல்லது வெப்ப வாதம் என்று சொல்லலாம். கோடை வெயிலில் அதிக நேரம் எந்த பாதுகாப்பும் இன்றி வெளியே சென்றால், உங்கள் உடல் கட்டுப்பாட்டை இழந்துவிடும்.
உடலின் வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு பலவீனமடைந்து, பாதிக்கப்படும். இந்த சமயத்தில் Heat Stroke ஏற்படும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை, 98.6 டிகிரி பாரன்ஹீட். உடலின் வெப்பநிலை 106 டிகிரிக்கும் மேல் அதிகரிப்பதே ஹீட் ஸ்ட்ரோக். கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மனிதர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவின் நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் ஹீட் ஸ்ட்ரோக் 'உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலை' என்று குறிப்பிடுகிறது. இதன் இறப்பு விகிதம் 40-64% ஆக இருப்பதாகச் சொல்கிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அதிகப்படியான ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவது ஆண்டு தோறும் தொடர்கதையாக உள்ளது. டெல்லியில் கோடை காலத்தில் வெப்ப அலை வீசும். மக்களால் இயல்பு வாழ்க்கை வாழ்வதே கடினம்.
Heat Stroke யாரை அதிகம் தாக்கும்?
வயதில் முதிர்ந்தவர்களுக்கு அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக நமக்கு வியர்வை சுரக்கும், அதன் காரணமாக உடலின் வெப்பநிலை குறைந்து சமநிலைப்படுத்திக்கொள்ளும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வயதானவர்களுக்கு இந்த சமநிலைப்படுத்தும் தன்மை குறைந்திருக்கும். இதனால் அவர்களுக்கு சரியாக வேர்க்காது. உடல்சூடு அதிகமாகிவிடும். உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் சூழல் உருவாகும். இதுமட்டுமின்றி அவர்களுக்கு உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருக்கும், இதனாலும் சமநிலை பேணும் தன்மையும் குறைந்துபோகும். மக்கள் பலரும் வெளியே சென்றால் தான் வெப்ப வாதம் ஏற்படும் என தவறாக நினைக்கிறார்கள், ஆனால் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் கூட வெப்ப வாதம் ஏற்படலாம். வீடு மிகவும் சூடாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்போது, உடலின் நீர்ச்சத்து குறைந்து, வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.அலுவலகமின்றி வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஹீட் ஸ்ட்ரோக்கின் பாதிப்பின் அபாயம் அதிகளவில் உள்ளது.
பெண்கள்: வீட்டிலேயே இருக்கும் பெண்மணிகளுக்கும் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. காரணம் அதிக நேரம் அடுப்பின் வெட்பத்தில் இருப்பதும் ,வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப நீர் அருந்தாமல் தவிர்ப்பதுமே.
Heat Stroke: அறிகுறிகள்:
- மூச்சுத் திணறல், விரைவான இதயத் துடிப்பு
- தசைகளில் வலி
- தலைச்சுற்றல், தலைவலி
- சருமம் குளிர்ச்சியாதல்
- மிகுந்த சோர்வு
- தசைப்பிடிப்பு
- வாந்தி மற்றும் குமட்டல்
- சுயநினைவு இழப்பு
- தோல் சிவத்தல்
- மனநிலை மாற்றம்
- வேர்வையின்மையுடன் சிவந்த, சூடான, அல்லது வறண்ட சருமம்.
உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:
ஹீட் ஸ்ட்ரோக் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். உங்கள் உடலில் உள்ள அனைத்து சக்தியும் வடிந்து போன உணர்வை நீங்கள் அனுபவிப்பீர்கள். மூளையும் சமநிலையற்றதாகிவிடும். கடுமையான நிலையில் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. க உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். உடல் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடும். கண்கள் மங்கலாகும். தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், ஹீட் ஸ்ட்ரோக் கோமா நிலைக்குச் செல்லக்கூடும்.
Heat Stroke வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
- வெயில் உக்கிரமாக இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே போனாலும் அவசியம்கையில் குடை வைத்துக் கொள்ள வேண்டும்.சன்கிளாஸ்கள் அல்லது சன்ஸ்கிரீன் அணியுங்கள்.
- தாகம் எடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை எடுத்துக்கொள்ளலாம்.
- பகல் நேரத்தில் மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கலாம்.
- முடிந்த வரையில் கைக்குட்டையை நீரில் நனைத்தவாது முகத்தை அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம்.
- குறிப்பாக அதிக வெப்பம் இருக்கும் வேலைகளான 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லுவதை தவிர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒருமுறை அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.
சிகிச்சைகள்:
இந்த ஆண்டு வெப்பவாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.ஹீட் ஸ்ட்ரோக் மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

