பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் தனது அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமாக பகிர்ந்த கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
குறிப்பாக ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவர் சந்தித்த விமர்சனங்கள் குறித்து ஜான்வி வெளிப்படையாக பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
ஸ்ரீதேவி தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதலில் விழுந்தார். அப்போது போனி கபூர், தனது முதல் மனைவி மோனா கபூருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த திருமணம் காரணமாகவே ஸ்ரீதேவி மீது பல விமர்சனங்கள் எழுந்தன. "ஒரு குடும்பத்தை பிரித்தவர்" என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் அவரை பின்தொடர்ந்தது.
- ரீல்ஸுக்கு போட்டியாக ஜியோ ஹாட்ஸ்டார் கொண்டுவந்த புதிய தளம் 'Tadka'.. ஒரே நாளில் 100+ மைக்ரோ ஷோக்கள் வெளியீடு!
இந்த விமர்சனங்கள் தனது அம்மாவை மிகவும் பாதித்ததாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். மக்கள் அவரிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்றும், அவர் உயிரிழந்த பிறகு தான் அனைவரும் நல்லவிதமாக பேச தொடங்கினார்கள் என்றும் கூறியுள்ளார். இருப்பினும் அந்த பழைய குற்றச்சாட்டுகள் ஸ்ரீதேவியின் மனதில் ஆழமாக பதிந்திருந்ததாகவும் ஜான்வி நினைவுகூர்ந்தார்.
ஸ்ரீதேவி மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி:
மேலும், தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை ஸ்ரீதேவி ஒருபோதும் தனது குழந்தைகளிடம் பகிரவில்லை. எப்போதும் சந்தோஷமான விஷயங்களையே கூறியதாகவும், பின்னர் தான் அவரது வாழ்க்கை போராட்டங்களை புரிந்து கொண்டதாகவும் ஜான்வி கூறியுள்ளார். "அம்மா இருந்தபோது அவரை பாராட்டவில்லை" என்ற வருத்தம் தான் இன்று அதிகமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தடக் படத்தின் மூலம் அறிமுகமான ஜான்வி கபூர், தனது முதல் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் ஸ்ரீதேவி மறைந்தது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. துபாயில் ஏற்பட்ட அந்த திடீர் மரணம் குடும்பத்தையே சிதறடித்ததாகவும், அந்த இழப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"என் மகள் மிகவும் திறமையானவர்":
அதிகமாக அறியப்படாத ஒரு விஷயமாக, ஜான்வி நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமல் ஸ்ரீதேவி சென்று மறைந்து நின்று மகள் நடிப்பை பார்த்து பெருமைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "என் மகள் மிகவும் திறமையானவர்" என்று அவர் பெருமையாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது ஜான்வி கபூர், தனது அம்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப முடியுமானால் "நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை எதிர்கொண்ட விதம் எனக்கு பெருமை அளிக்கிறது" என்று சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த உருக்கமான பேச்சு ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் சிலர் ஜான்வி எப்போதும் ஸ்ரீதேவியை பற்றி பேசுவது கவன ஈர்ப்புக்காக என விமர்சிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான ரசிகர்கள் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஒரு நடிகையின் வெற்றிக்கதை மட்டுமல்ல; பல சவால்களை கடந்து வந்த ஒரு பெண்மணியின் பயணமாகவும் பார்க்கப்படுகிறது. இன்று அவரது மரபை தொடர்ந்து ஜான்வி மற்றும் குஷி கபூர் இருவரும் சினிமாவில் முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

