Dailyhunt
கோவையைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையைக் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2021-ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து, நான் அதிக முறை வந்த மாவட்டம் எது தெரியுமா? இந்தக் கோவை மாவட்டம்தான். இன்னும் சொல்லப்போனால், ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய நோய் உச்சத்தில் இருந்தது. முதலமைச்சரான அடுத்த மாதமே PPE கிட் அணிந்துகொண்டு, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தவன்தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்குத் தெரியும்.கோவையும் என்னுடைய ஊர்தான் என்று சொல்லத்தக்க அளவிற்கு, கோவையோடு நான் ஒன்றிப் போயிருக்கிறேன். அதனால்தான், இப்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரையிலேயே கோவைக்கு வந்துவிட்டேன்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி , கோவை வடக்கு வேட்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன், சூலூர் வேட்பாளர் தளபதி முருகேசன் , கிணத்துக்கடவு வேட்பாளர் கே.வி.கே. சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் நித்தியானந்தம், வால்பாறை வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகர் ,தொண்டாமுத்தூர் வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் ,மேட்டுப்பாளையம் வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் ஆகியோரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்தார். சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி. இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். சகோதரர் ராகுல் காந்தி அவர்களால் அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களுக்கு கை சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசியவர், "அதிமுகவைப் பார்த்து நாம் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டோம் என்று வாய்கூசாமல் சொல்கிறார் பழனிசாமி. தி.மு.க. செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கட்டணமில்லா விடியல் பயணம் என்று பழனிசாமிதான் நம்முடைய திட்டங்களை ஒன்று விடாமல் காப்பி அடித்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.பத்தாண்டு ஆட்சியில் இருந்தும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் என்று பட்டியல் போட அவரிடம் எதுவும் இல்லை. இந்தக் கஷ்டம் பழனிசாமியை விட, அவரது ஓனரான பிரதமர் மோடி அவர்களுக்கு இன்னும் அதிகம் அவராலும் தமிழ்நாட்டிற்குச் செய்த சிறப்புத் திட்டம் என்று எதையும் சொல்ல முடியாது.பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே வாழும் நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் சீசன் காரணத்தினால் இப்போது அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். எனறு விமர்சித்தார்.

: தேர்தலில் போட்டியில்லை.. அண்ணாமலை பின்வாங்க என்ன காரணம்?

பாஜகவைத் தமிழ்நாடு ஏன் இந்த அளவிற்கு எதிர்க்கிறது என்றால், தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சிக்கிறது, இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் அவமானப்படுத்துகிறது. தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் பாசத்தில் நம்மையே மிஞ்சுவது போன்று நடிக்கிறார்கள் இல்லையா? இதுவே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடி என்ன பேசினார்? ''தமிழ்நாட்டில் பீகார் மக்களைத் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்" என்று பொய்யைப் பேசினார். அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக்குத் தகுதியான பேச்சா இது? இப்போது தமிழ்நாட்டிற்கு நீங்கள் வாக்கு கேட்டு வரப்போகிறீர்கள். பீகாரில் பேசிய அந்த வார்த்தையை தமிழ்நாட்டில் தைரியம் இருந்தால் பிரதமர் மோடி அவர்கள் சொல்வாரா? இதைத்தான் நான் கேட்கிறேன்."எனக் கேள்வி எழுப்பினார்.

மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு:
கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களைக் கூட நிராகரித்திருக்கும் அரசுதான், இன்றைய ஒன்றிய பாஜக அரசு. 20 இலட்சம் மக்கள் தொகை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்து, அப்படி சொல்கிறார்கள். இப்போது நடப்பது 2026. மக்கள் தொகை இப்போது வெகுவாக கூடி இருக்கும். இன்னும் சொன்னால், இந்தத் திட்டத்திற்குப் பணம் ஒதுக்கி, அதை நிறைவேற்றி முடிக்கும்போது 2035-ஆம் ஆண்டே ஆகியிருக்கும். அப்போது கோவை, மதுரையின் மக்கள் தொகை இவர்கள் சொல்லும் 20 இலட்சத்தை எல்லாம் தாண்டி இருக்கும். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்காதீர்கள். நன்றாகத் தெரியும் தெரிந்தேதான் கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் கிடையாது என்று பா.ஜ.க. மறுக்கிறது. தமிழ்நாட்டைப் பார்த்தால் பா.ஜ.க.வுக்கு எப்படி தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதது என்ன பாவச் செயலா? கோவையைக் கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜ.க. துடிக்கிறதே. கோவை மக்களுக்கு இப்படி அநீதி இழைத்துவிட்டு, எந்த முகத்தோடு நீங்கள் கோவைக்கு வருகிறீர்கள் என்றார்.

கோவை மக்களான நீங்கள் இந்த முறை பத்துக்குப் பத்து வெற்றியை தி.மு.க.வுக்கும் - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். நீங்கள் வழங்கும் வாக்கு என்பது, ஒரு கூட்டணிக்காக வழங்கும் வாக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கும் வாக்கு. அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் நடத்தப் போகிறோம்." என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi