Dailyhunt
MK Stalin: சக்தியை மீறி உழைத்தேன்.. சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்.. மு.க.ஸ்டாலின் பதிவு!

MK Stalin: சக்தியை மீறி உழைத்தேன்.. சிறந்த எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்.. மு.க.ஸ்டாலின் பதிவு!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் தொடக்கம் முதலே விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றுவந்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுகவும்(DMK Party), எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவும் இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டன.

இரவு 9 மணி நிலவரப்படி விஜயின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. திமுக 60 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன்மூலம், தவெக தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அமைக்கக் கூடிய தனிபெரும் கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோல்வியை தழுவினார். அத்துடன் பல சிட்டிங் அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தீர்ப்பை ஏற்பதாகவும், திமுக ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது பதிவில் கூறியதாவது, "மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.

: விஜய் முதல்வராக தவெகவுக்கு ஆதரவு தருமான காங்கிரஸ்.. ராகுல் என்ன முடிவெடுக்க போகிறார்?

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.

சக்தியை மீறி உழைத்தேன்

நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி !

எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.

: கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்திய விஜயின் தவெக.. யார் இந்த வி.எஸ். பாபு?

அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்" என்றுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து யார் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi