Dailyhunt
சாத்தான்குளம் வழக்கில் திருப்புனை ஏற்படுத்திய சாட்சியங்கள்.. 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை எதற்காக? - நீதிபதி விளக்கம்

சாத்தான்குளம் வழக்கில் திருப்புனை ஏற்படுத்திய சாட்சியங்கள்.. 9 போலீசாருக்கு தூக்கு தண்டனை எதற்காக? - நீதிபதி விளக்கம்

Sathankulam Case History : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட கால வரம்பை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசாருக்கும் ஜெயராஜ்-க்கும் இடையே 2020 ஜூன் 19ஆம் தேதி அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தனது தந்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த பென்னிக்ஸும் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்றார்..

கொடூர சித்ரவதை


காவல் நிலையத்தில் வைத்து தந்தை - மகன் ஆகிய இருவரையும் அங்கிருந்த போலீசார் பல மணி நேரம் கொடூரமாக தாக்கினர். மனிதாபிமானத்தை மீறும் வகையில் இருவரையும் நிர்வாணமாக்கி தாக்கியதுடன் ஆசனவாயில் லத்தியை திணித்துள்ளனர்.

இரவு முழுவதும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட இருவரும் சிகிச்சையளிக்கப்படாமல் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது நடந்த இந்த மனிதநேயமற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்களான ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை, போலீஸ்காரர்களான முருகன், முத்துராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலு முத்து , சாமத்துரை என மொத்தம் 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தந்தை மகன் இரட்டை கொலை சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். எஞ்சிய 9 போலீசார் மீதான வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

கதறி அழுத போலீஸ் குடும்பங்கள்

இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 2,400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கடந்த மாதம் 23ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் 9 போலீசாருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும், ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த தீர்ப்பை கேட்டதும் 9 போலீசாரின் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.

ரூ.63,000 மதிப்புள்ள சைக்கிள் வைத்துள்ள, விஜய்க்கு அடுத்த தவெகவின் 2வது பெரிய கோடீஸ்வர வேட்பாளர் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு?

9 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து 650 பக்க தீர்ப்பில் நீதிபதி முத்துக்குமரன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, 'காவல் நிலைய மரணங்கள் என்பது உலகம் முழுவதும் நடக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் அஜித் குமார் கொலை வழக்கு வரையிலும் காவல் நிலையங்களில் நடக்கும் சித்திரவதை மரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

பெண் போலீசாரின் சாட்சியங்கள்

பொதுவாக இது போன்ற குற்றச்சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. ஆனால் இந்த வழக்கில் வீடியோ ஆதாரங்கள், சக பெண் போலீசார் உள்ளிட்ட போலீஸ்காரர்களும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர்.



இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் முடிவு செய்தது. மேலும் இதுபோன்று ஒரு சம்பவம் இனி நிகழக் கூடாது. அதற்கு இது ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும், பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என நினைப்பதாலும் 9 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.' என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

போலீசாருக்கு மரண தண்டனை விதிக்க காரணமாக அமைந்த சாட்சியங்கள்..

  • அரிதிலும் அரிதான வழக்காக சாத்தான்குளம் வழக்கை கருதிய மதுரை நீதிமன்றம் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. காவல் நிலைய மரணங்கள் இனி நிகழக்கூடாது என போலீசாரை எச்சரிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
  • இந்த வழக்கில் போலீசாருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சாட்சியங்கள் மிகத் துல்லியமாக அமைந்தது முக்கிய காரணமாக இருந்துள்ளது. இந்த வழக்கில் திருப்பங்களை ஏற்படுத்திய சாட்சியங்கள் பற்றி விரிவாக அறியலாம்.
  • முதலில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது ஜெயராஜ் தனது செல்போன் கடையை நீண்ட நேரமாக திறந்து வைத்திருந்ததாகவும், அப்போது ரோந்து போலீசார் அதை கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தான் இந்த சம்பவத்தில் தொடக்கப் புள்ளியாகும்.
  • போலீசாருக்கும், ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். ஜெயராஜ் காவல் நிலையத்தில் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். தனது தந்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்து அவரை வீட்டுக்கு அனுப்பும்படி பென்னிக்ஸ் போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் தந்தையை வீட்டுக்கு அனுப்ப மறுத்த போலீசார், இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
  • ஆசனவாயில் லத்தியை திணித்து கடுமையாக தாக்கியதில் இருவருக்கும் ரத்தப்போக்கு அதிகரித்தது. அதில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளில் அதிக அளவு ரத்தம் வழிந்து இருக்கிறது. காவல் நிலையத்தில் படிந்த ரத்தக் கறையை அவர்கள் இருவரையும் வைத்து சுத்தம் செய்ய போலீசார் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த ஆடைகளும், அவர்கள் தாக்கப்பட்ட இடங்களில் இருந்த ரத்தக் கறைகளும், தடயங்களும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களாக அமைந்தன.
  • காவல் நிலையத்தில் கடுமையான தாக்குதலை சந்தித்த இருவருக்கும் சிகிச்சை அளிக்காமல் கோவில்பட்டி சிறையில் போலீசார் இருவரையும் அடைத்தனர். ஆனால் அங்கு இருவரின் உடல் நிலையும் தொடர்ந்து மோசம் அடைந்ததால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் நேரில் பார்த்தவர்கள், பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், கோவில்பட்டி சிறை அதிகாரிகளின் சாட்சியங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • இந்த சம்பவத்தை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் சரியாக இருக்காது என கருதிய நீதிபதிகள் 3 மேஜிஸ்ட்ரேட்டுகளை நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். இந்த அறிக்கைகளும் இந்த வழக்கின் குற்றங்களை நிரூபிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.
  • இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பு ஏற்பதற்குள் காவல் நிலையத்தில் இருக்கும் தடயங்கள் அழிக்கப்பட்டு விடும் எனக் கருதிய மதுரை உயர்நீதிமன்ற கிளை, சிபிஐ அதிகாரிகள் வரும் வரையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் அணில் குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவர் அளித்த விசாரணை ஆவணங்களும் முக்கிய பங்காற்றி உள்ளன.
  • பொதுவாக போலீசார் குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக மற்ற போலீசார் சாட்சியங்கள் சொல்வது அத்தனை எளிதானதல்ல. ஆனால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் தாக்கப்பட்டது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ்களான ரேவதி மற்றும் பியூலா ஆகியோர் சாட்சியம் அளித்தனர். இதில் முக்கிய சாட்சியான ரேவதி தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியது கவனிக்கத்தக்கது. தன் மீது எந்தத் தவறும் இல்லை என காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து கூறி வந்த நிலையில் பெண் போலீசாரின் சாட்சியங்களுக்கு முன் அவரது வாதம் எடுபடவில்லை
  • சாத்தான்குளம் காவல் நிலையம் உடனடியாக வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டதால், தடயங்கள் பாதுகாக்கப்பட்டு அவை சேகரிக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தத் தடயங்களை சேகரித்தவர்கள் அளித்த சாட்சியங்களும் முக்கியமாக பார்க்கப்பட்டன.
  • 120-பி என்ற சட்டப்பிரிவு கூட்டுச்சதியை குறிப்பதாகும். இந்த சட்டப்பிரிவை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என சிபிஐ, மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடியது. 9 போலீசாருக்கு மரண தண்டனை கிடைக்க முக்கிய காரணங்களில் இது முக்கியமானதாகும்.
  • இந்த வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் தனக்கு எதிராக இருப்பதை உணர்ந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஒரு கட்டத்தில் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக வழக்கை திசை திருப்பும் முயற்சியாக, அப்ரூவராக போவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
  • மேலும் சாத்தான்குளம் சம்பவம் நடந்த உடனே தங்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என கருதிய போலீசார் காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்களை திருத்தி உள்ளனர். இதனை சிபிஐ கண்டுபிடித்தது. அதேபோல வழக்கின் ஆவணங்களை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் திருத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் நீதிபதியிடம் தெரிவித்தது திருப்புமுனையாக அமைந்தது.

இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் 6 ஆண்டுகளாக மத்திய சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Times Now Seithi